ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிர்ப்பு தலைமை தபால் நிலையத்தை மக்கள் அதிகாரம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 37 பேர் கைது

திருச்சி, டிச.18: ஸ்டெர்லைட் ஆலை திறப்புக்கு எதிராக திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் தபால்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் 37 பேரை போலீசார் கைது செய்தனர்.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு அநீதியானது, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி மக்கள் அதிகாரம் திருச்சி மண்டலம் சார்பில் ஏராளமானோர் திரண்டு, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த 13 பேரின் படங்களை முகமூடியாக அணிந்து மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன் தலைமையில் பேரணியாக தலைமை தபால் நிலையம் நோக்கி வந்தனர்.

முன்னெச்சரிக்கையாக அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தபால் நிலைய கேட்டை இழுத்து மூடினர். மேலும் சாலையில் இடையூறு ஏற்படாத வகையில் கயிறு கட்டியிருந்தனர். இதையடுத்து அங்கு வந்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள்போல் சாலையில் படுத்து கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழந்தை மற்றும் 7 பெண்கள் உள்பட 37 பேரை  போலீசார் கைது செய்து அப்பகுதியில் இருந்த திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories: