குடிநீர் வணிக கொள்ளை ரூ.2 ஆயிரம் கோடி : வடிகால் வாரிய சம்மேளனம் குற்றச்சாட்டு

திண்டுக்கல், டிச. 16:  தமிழ்நாட்டில் குடிநீர் வணிக கொள்ளை ஆண்டுக்கு ரூ.2000 கோடி நடப்பதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் சம்மேளனம் குற்றம்சாட்டி உள்ளது.

திண்டுக்கல்லில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் சம்மேளனம் 10வது மாநில மாநாடு நேற்று நடந்தது, மாநில தலைவர் அழகிரி தலைமை வகிக்க, பொதுச் செயலாளர் காந்தி முன்னிலை வகித்தார். தமிழ் தேசிய பேரியக்க பொதுச் செயலாளர் வெங்கட்ராமன், தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பாண்டியன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினர். பட்டுக்கோட்டை கவிஞர் ஜீவபாரதி சிறப்புரையாற்றினார்.

மாநாட்டில் கடந்த 47 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் குடிநீர் திட்ட செயல்பாடுகளை தமிழ்நாடு அரசு பல்வேறு வழிகளில் முடக்கி வருகிறது. அதனை கைவிட வேண்டும். நிர்வாக செலவு குறைக்கப்பட்டதால் மாதம் மாதம் சம்பளம், ஓய்வூதியம் வழங்குவதற்கு வாரிய நிர்வாகம் மிகவும் சிரமப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 4 ஆண்டுகளில் ஓய்வுபெற்ற சுமார் 350 பணியாளர்களுக்கு ஓய்வூதியம், குடும்ப பென்ஷன், பணிக்கொடை , விடுப்பு சம்பளம் வழங்கப்படவில்லை இதனை உடனே வழங்க வேண்டும். 1970ம் ஆண்டு குடிநீர் வடிகால் வாரிய சட்டத்தை திருத்தி அனைத்து திட்டங்களையும் கழிவுநீர் அகற்றுதல் திட்டங்களையும் குடிநீர் வாரியம் மூலமாக மட்டுமே செய்ய ஆவணம் செய்ய வேண்டும். ஒரு பொறியாளருக்கு 10 இதர பணியாளர்களாக 12 ஆயிரம் பேர்கள் வேலை செய்து வந்த வாரியத்தில், தற்போது 2, 500 பணியாளர்களே உள்ளனர் இதனை சரிசெய்து ஆள் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய வேண்டும். இயற்கையின் நன்கொடையான குடிநீர் முன்பு இலவசமாக கிடைத்தது. ஆனால் இன்று அது ஒரு வணிக பொருளாக பன்னாட்டு நிறுவனங்களால் மாற்றப்பட்டுவிட்டது. அதன் விளைவாக ஒரு லிட்டர் ஒரு காசு கூட பெறாத குடிநீரை, இன்று பாட்டிலில் அடைத்து ஒரு லிட்டர் ரூ.10  முதல் ரூ.25  வரை விற்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் குடிநீர் வணிக கொள்ளை ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரம் கோடி நடைபெறுவதாக கூறப்படுகிறது. ஒரே  ஐஎஸ்ஐ முத்திரையுள்ள குடிநீர் பாட்டில்,  வெவ்வேறு விலையில் விற்கப்படுகிறது. இதனை மத்திய, மாநில அரசுகள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 ஆயிரம் குடிநீர் பராமரிப்பு பணியாளர்களில் 2750 பேர்கள் கடந்த 15  ஆண்டுகளுக்கும் மேலாக ரூ.1500 முதல் ரூ.5000 வரை சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை செய்து வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு அரசு நிர்ணயித்த சம்பளம் ரூ.11 ஆயிரம் முதல் 13 ஆயிரம் ஆக உள்ளது. எனவே 2 ஆண்டுகளில் 480 நாட்கள் தொடர்ந்து பணி முடித்த நாளிலிருந்து ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு உரிய சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: