×

வெண்ணாறு பாசன வாய்க்காலில் தண்ணீர் வராததால் சம்பா பயிர்கள் கருகும் அபாயம் விவசாயிகள் கவலை

வலங்கைமான், டிச.16: வலங்கைமான் தாலுக்கா பகுதிகளில் வெண்ணாறு கோட்ட பாசன ஆறுகளில் தண்ணீர் வராததால்   புலவர் நத்தம் உள்ளிட்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா மற்றும் தாளடி பயிர்கள் தண்ணீர் இன்றி காயத் தொடங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் குடமுருட்டி ஆறு, வெட்டாறு, வெண்ணாறு மற்றும் சுள்ளன் ஆறு மூலம் நடப்பு பருவத்தில் சுமார் 14 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 15 தினங்களுக்கு மேலாக  வலங்கைமான் பகுதியில் குறிப்பிடும் படியாக  மழை பெய்யவில்லை. ஆறுகளில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவது  கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நெற்பயிர்கள் தண்ணீரின்றி காயத்தொடங்கியது. தற்போது காவிரி கோட்டத்தின் கிளை ஆறுகளில் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில்,  வெண்ணாறு கோட்டத்தின் கிளை ஆறுகளுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

இந்நிலையில் வலங்கைமான் அடுத்த புலவர் நத்தம் மற்றும் நரிக்குடி கிராமத்தில் தண்ணீரின்றி பாசன வாய்க்கால்கள் வறண்டு கிடக்கிறது. இதன் காரணமாக  சம்பா பயிர்கள் கதிர் வரும் சூழ்நிலையில் தண்ணீர் இல்லாததால் கதிர்கள் பதராகும் சூழ்நிலை ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் வயல்களில் தண்ணீர்  இல்லாததால் அதிகளவில் எலி வெட்டும் உள்ளது.  அதேபோல் பின்பட்ட தாளடி பயிர்கள் தொடக்க நிலையிலேயே தண்ணீரின்றி காயத் தொடங்கியுள்ளது. மேட்டூர் அணையில் பாசனத்திற்கு போதிய தண்ணீர் இருந்தும் விவசாயிகளின் தேவையை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதில் பொதுப்பணித்துறை உரிய கவனம் செலுத்தவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.


Tags : Samba ,Vennaru ,
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை