கூடுதல் விலைக்கு மணிலா விதை விற்பனை

குறிஞ்சிப்பாடி, டிச. 16: குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு, ராஜா குப்பத்தனாங்குப்பம், பொன்வெளி, வெங்கடாம்பேட்டை, ஆயிப்பேட்டை, மீனாட்சிப்பேட்டை, கண்ணாடி, ஆடூர் அகரம், கட்டியங்குப்பம், கிருஷ்ணங்குப்பம் குள்ளஞ்சாவடி, வெங்கடாம்பேட்டை, வரத

ராஜன்பேட்டை, தம்பிப்பேட்டை, ரெங்கநாதபுரம், பூவானிக்குப்பம், பெத்தநாயக்கன்குப்பம், மருவாய், குருவப்பன்பேட்டை, கண்ணாடி, கல்குணம், பூதம்பாடி, ஆயிக்குப்பம், ஆதிநாராயணபுரம், அரங்கமங்கலம், அனுக்கம்பட்டு, அன்னதானம்பேட்டை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், சுமார் 7 ஆயிரம் ஹெக்ேடரில் மணிலா பயிரிடப்பட்டு வருகிறது.கடந்தாண்டு 40 கிலோ கொண்ட விதை மணிலா பயிர் ரூ.3,100க்கு விற்பனையானது. இந்தாண்டு ரூ.3,600 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதனை உரித்தால் மணிலா கொட்டை 25 கிலோ கிடைக்கும். ஏக்கர் ஒன்றுக்கு 120 கிலோ மணிலா விதை தேவைப்படும்.

வேளாண்துறையில் விதை மணிலா ரூ.2,200க்கு கொடுக்கிறார்கள். ஆனால் அனைவருக்கும் கிடைப்பதில்லை. இதனால் விதை தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் வெளி மார்க்கெட்டில் அதிக விலைக்கு வாங்குகின்றனர். மேலும், விதை விற்பனை செய்யும் வியாபாரி

களுக்கு உரிமம் கிடையாது என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து விவசாயி ராமலிங்கம் கூறுகையில், வேளாண்துறையில் குறைவான விவசாயிகளுக்கு தான் விதை மணிலா வழங்குகின்றனர். இதனால் குஜராத் போன்ற பகுதிகளுக்கு சென்று ஜி7, ஜி9, விருத்தாசலம் 2 ரக மணிலா விதை பயிர்களை வியாபாரிகள் வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர். ஆனால் இவர்கள் யாருக்குமே உரிமம் இல்லை.விழுப்புரம், கடலூர் ஆகிய இரு மாவட்டங்களுக்கும் சேர்த்து மண்டல விதை அலுவலர் உள்ளார். இவர் தான் விதை விற்பனை செய்ய அனுமதி தர வேண்டும். ஆனால் அதிகாரிகள் யாரும் முறையாக பார்வையிட்டு அனுமதி தருவதில்லை. இதன் காரணமாக வியாபாரிகள் அதிகளவு விலை வைத்து விற்பனை செய்து வருகின்றனர். வியாபாரிகளுக்கு வேளாண் அதிகாரிகள் துணை போகின்றனர்.

ஜி7, ஜி9 ரகப் பயிர் அதிகளவு மகசூல் கிடைக்கும். அதனால் பெரும்பாலான விவசாயிகள் இந்த ரகத்தையே விரும்பி பயிர் செய்கின்றனர். ஆனால் வேளாண்துறையில் மகசூல் குறைவான விருத்தாசலம் 2, கோயம்புத்தூர் 2 விதைகளை விநியோகம் செய்கின்றனர்.

குறிஞ்சிப்பாடியில் சுமார் 7 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மணிலா பயிரிடப்படுகிறது. ஆனால் வேளாண்துறை சார்பில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவிற்கு மட்டுமே விதை பயிர் விநியோகம் செய்கின்றனர். இதன் காரணமாக விலை அதிகம் என்றாலும் வெளியே வாங்கி பயிர் செய்து வருகிறோம்.

கடந்த திமுக ஆட்சியில் விதை பண்ணை திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. ஒரு கிராமத்தை தத்தெடுத்து மணிலா உள்ளிட்ட பயிர் பயிரிடப்பட்டு, அதனை அறுவடை செய்து விதை பயிர் விற்பனை செய்யப்பட்டு வந்தது. விலையும் குறைவாக கிடைத்தது. தற்போது இந்த திட்டத்தையே நீக்கி விட்டனர்.எனவே மண்டல விதை அலுவலர் ஒவ்வொரு ஒன்றியங்களிலும் பார்வையிட்டு, அனுமதியில்லாமல் விதை பயிர் விற்பனை செய்து வரும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விலையை கண்காணிக்க வேண்டும். வேளாண் துறையில் ஜி7, ஜி9 போன்ற ரகங்களை வழங்க வேண்டும் என்றார்.

Related Stories: