புதிய நிர்வாகிகள் நியமனத்தால் புதுச்சேரி காங்கிரஸ் உற்சாகம்

புதுச்சேரி, டிச. 16:  புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஆயத்தமாக புதிய நிர்வாகிகளை நியமித்து ராகுல் எடுத்துள்ள அதிரடி வியூகத்தால் காங்கிரசார் உற்சாகம் அடைந்துள்ளனர்.புதுவையில் 2016 பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சி திமுக ஆதரவுடன் ஆட்சியை கைப்பற்றியது. முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை இரண்டரை ஆண்டுகளாக மக்கள் பணிகளை செய்து வருகிறது. இருப்பினும் மத்திய பாஜக அரசால் நியமிக்கப்பட்ட கவர்னர் கிரண்பேடியால் மாநில அரசுக்கு பல்வேறு இடையூறுகள் கொடுக்கப்பட்ட நிலையிலும் அவற்றை எதிர்கொண்டு வருகிறது.அரசின் பல்வேறு கோப்புகளுக்கு கவர்னர் கேள்வி எழுப்பி அவற்றை திருப்பி அனுப்பி வருவதால் அமைச்சர்கள் வேதனையடைந்தனர்.

 ஆனால் இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு தொடர்ந்து வெற்றிகரமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளால் புதுச்சேரி காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது.ஒன்று, இரண்டு மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் இருந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் கடும் உழைப்பின் காரணமாக தற்போது மேலும் 3 மாநிலங்களை அக்கட்சி கைப்பற்றியிருப்பதால் காங்கிரசார் உற்சாகம் அடைந்துள்ளனர்ஒவ்வொரு முதல்வர்களை தேர்வு செய்வதில் அந்தந்த மாநில அடிமட்ட தொண்டர்களின் கருத்தறிந்து முடிவை எடுத்ததும் அவர் மீதான எதிர்பார்ப்பை அக்கட்சியினர் இடையே அதிகரித்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி காங்கிரசார் வருகிற பாராளுமன்ற தேர்தலை முழு உற்சாகத்துடன் எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.மத்திய அரசும், கவர்னரும் அளித்த பல்வேறு தடைகளை சமாளித்து ஆட்சியை தொடரும் முதல்வரும், அமைச்சர்களும் தற்போது ஒருமித்த கருத்துடன் தங்களது பணிகளை தொடர்ந்து வருகின்றனர். கட்சிக்கு புதுரத்தம் பாய்ச்சும் வகையில் புதிய நிர்வாகிகளின் பட்டியலும் சில தினங்களுக்கு முன் மாநில காங்கிரஸ் தலைமையால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, பிரதேச காங்கிரஸ் கமிட்டி, வட்டார தலைவர்கள், மாவட்ட, தொகுதி பொறுப்பாளர்கள் என அனைத்து பதவிகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். மேலிட பார்வையாளர்களும் அவ்வப்போது புதுச்சேரி வந்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொருவரும் தங்களது ஒதுக்கப்பட்ட பொறுப்புகளை திறம்பட செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 ஒவ்வொரு தொகுதியிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் காங்கிரசார் உற்சாகம் அடைந்துள்ளனர். ராகுல்காந்தி வழிகாட்டுதலின்பேரில் 2019 பாராளுமன்ற தேர்தல் பணிக்கு அவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர்.

 மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால்தான் புதுச்சேரிக்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ள அனைத்து மக்கள் நலத் திட்டங்களையும் மீண்டும் திறம்பட செயல்படுத்த முடியும் என்பதால் பாஜகவை வீழ்த்துவதற்கான வியூகங்களை திட்டமிட்டு வருகின்றனர்.

Related Stories: