வில்லியனூர் சப்-கலெக்டர் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம்

புதுச்சேரி, டிச. 16:  புதுச்சேரி மாநில மாட்டு வண்டி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி மாநில பேரவை கூட்டம் மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூரில் நடந்தது. மாட்டு வண்டி சங்க மாநில தலைவர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். அர்ஜூனன்,  பிரகாஷ், வெங்கடேசன், பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏஐடியுசி மாநில செயல் தலைவர் அபிஷேகம், விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் கீதநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இந்த கூட்டத்தில், புதுச்சேரியில் உள்ள சங்கராபரணி, பெண்ணையாற்று பகுதியில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் நீண்ட காலமாக மணல் எடுத்து வியாபாரம் செய்து வந்தார்கள். இவர்கள் எடுக்கும் மணலை ஏழை மக்கள் நியாயமான விலைக்கு வாங்கி வீடுகளை கட்ட பயன்படுத்தி வந்தனர். இதனால் மாட்டு வண்டி தொழிலாளர்களும், பொது மக்களும் பயன்பெற்றனர். தற்போது புதுச்சேரியில் உள்ள ஆற்றுப்படுகைகளில் மணல் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டு வீடுகள் கட்ட முடியாத அளவுக்கு கட்டுமான தொழில் முடங்கி உள்ளது.இத்தொழிலை மட்டுமே நம்பியுள்ள மாட்டு வண்டி தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையில் வருகின்றனர். இவர்கள் மணல் எடுத்து வியாபாரம் செய்யும் வகையில் புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 20ம் தேதி வில்லியனூர் சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Stories: