உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளிருப்பு பயிற்சி திட்டம்

புதுச்சேரி, டிச. 15:புதுச்சேரி உள்ளாட்சித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் புதுச்சேரி பிரதேசத்தில் உள்ள நகர உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளிருப்பு பயிற்சி அளிக்க உள்ளாட்சித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த பயிற்சியில் சேர்வதற்கு புதுச்சேரியை சேர்ந்த தகுதியும், விருப்பமும் உள்ள இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 உள்ளிருப்பு பயிற்சிக்கான துறைப்பிரிவுகள்: விலங்கு பிறப்பு, கட்டுப்பாடு, குப்பையில் இருந்து மறுசுழற்சி ஆற்றல், தலைமை திட்டங்கள் (அம்ரூத், ஸ்வச் பாரத் மிஷன், ஸ்மார்ட் சிட்டி, திடக்கழிவு மேலாண்மை), பொறியியல், சிவில், மின், பொது சுகாதாரம், நீர் வழங்கல், சாலைகள், கழிவுநீர் மற்றும் சூழல், சுகாதாரம், நகராட்சி நிதி, மனித வளம், நகராட்சி அமைப்புகள் தொடர்பான எந்தவொரு இதர பணிகள்.

 அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மூலம் பட்டய பயிற்சி, இளநிலை பட்டம், முதுகலை பட்ட படிப்பை மேற்கூறப்பட்டுள்ள உள்ளிருப்பு பயிற்சிக்கான துறைப்பிரிவுகளில் முடித்து 3 ஆண்டுகளுக்கு மிகாமல் இடைவெளி உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். உள்ளிருப்பு பயிற்சி பெறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் பயிற்சி காலம் முடியும் வரை மாதம்தோறும் உதவித்தொகையாக வழங்கப்படும். உள்ளிருப்பு பயிற்சிக்கான காலவரையறை 30 நாட்கள் மேலாகவும், ஓராண்டுக்கு மிகாமலும் இருக்கும். வெற்றிகரமாக பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.இதற்கான விண்ணப்பங்களை www.lad.py.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து இயக்குநர், உள்ளாட்சி துறை, எண் 16, சுய்ப்ரேன் வீதி, புதுச்சேரி என்ற அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வரும் 24ம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: