×

அரியலூரில் 2வது நாளாக பணிகளை புறக்கணித்து விஏஓவினர் போராட்டம்

அரியலூர், டிச.12: அரியலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது பணிகளை 2வது நாளாக புறக்கணித்து கலெக்டர் அலுவலகம் முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.சேனாபதி கிராம நிர்வாக அலுவலர் ராயர் கடந்த 7ம் தேதி அரியலூர் தாசில்தார் அலுவலகத்துக்கு சென்றார். அங்கு தலைமையிடத்து துணை தாசில்தார் குருமூர்த்தி, ஆர்.ஐ கார்த்தியிடம் போட்டி தேர்வு எழுதுவதற்காக இரண்டு நாள் விடுப்பு கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ராயர் ஆதரவாளர்களான வெங்கனூர் விஏஓ பிரபாகரன், குலமாணிக்கம் விஏஓ சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் தாக்கியதில் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் காயமடைந்தார். இது குறித்து துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில், விஏஓக்கல் ராயர், சுபாஷ் சந்திரபோஸ், பிரபாகரன் ஆகிய 3 பேரை பணியிடை நீக்கம் செய்து ஆர்டிஓ சத்தியநாரயணன் உத்தரவிட்டார்.

இந்நிலையில் உரிய விசாரணை செய்யாமல் 3 விஏஓக்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி நேற்றுமுன்தினம் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமியிடம் மனு கொடுக்க வந்த விஏஓக்கள் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த 43 பேரை போலீசார் கேட்டின் முன் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அன்றிரவு வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்த சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாதையடுத்து, 2வது நாளாக நேற்று பணிகளை புறக்கணித்து கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தில் 89 பேர் கலந்து கொண்டனர். போராட்டத்துக்கு அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பொய்யாமொழி தலைமை வகித்தார்.


Tags : VOVer ,struggle ,Ariyalur ,
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...