×

நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பெரம்பலூர், டிச. 12: பெரம்பலூரில் பொதுமக்களோ, இருசக்கர வாகனங்களோ செல்ல வழியின்றி போஸ்ட் ஆபீஸ் தெரு ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது. இப்பிரச்னையில் நகராட்சி நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரம்பலூர் நகராட்சி மாவட்டத் தலைநகர் அந்தஸ்து கொண்டது. இங்கு கல்வி, வர்த்தகம், வேலைவாய்ப்பு போன்றவற்றிற்காக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.குறிப்பாக புது துணிமணிகள் எடுக்கவும், வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கவும் பொதுமக்கள் அதிகம் வலம் வருவது பழைய பஸ் ஸ்டாண்டை சுற்றியுள்ள பகுதிகள் தான்.பழைய பஸ் ஸ்டாண்டுக்கு பஸ்களில் வந்திறங்கும் பொதுமக்கள் துணிகள், பாத்திரங்களை வாங்க பெரிய கடைவீதிக்கு செல்ல போஸ்ட் ஆபீஸ் தெருவைத்தான் பெரிதும் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் தெருவுக்கு அடையாளமான போஸ்ட் ஆபீஸ் செல்வதற்குக்கூட வழியின்றி இந்த சாலை ஆக்கிரமிப்புகளால் அடைபட்டு கிடப்பதுதான் வேதனையளிக்கிறது.

காரணம் போஸ்ட் ஆபீஸ் தெருவில் இருபுறங்களில் உள்ள கடைக்காரர்கள் தங்கள் எல்லை வரம்புகளை மீறி தெருக்களை ஆக்கிரமிப்பது மட்டுமன்றி, சாலையோர தரைக்கடைகள், தள்ளுவண்டிக் கடைகளின் ஆக்கிரமிப்புகளும் அதிகம் காணப்படுகின்றன. இதன் காரணமாக இந்த தெருக்களின் வழியாக இருசக்க வாகனங்கள் வந்தாலே கடைக்காரர்கள் எதிரிகளைப் பார்ப்பதுபோல் முறைப்பதும், நடக்க வழியின்றி இருசக்கர வாகனங்களை நிறுத்தி பாதைகளை ஆக்கிரமிப்பதும் சகஜமாகி விட்டது. இது குறித்து சுட்டிக்காட்டும்போது மட்டும் நகராட்சி நிர்வாகம் கண்துடைப்புக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறது.பிறகு 2 நாட்களில் எல்லைமீறும் கடைக்காரர்கள் தங்கள் கடைகளின் முன்பு சரக்குகளை கொட்டிவைத்து பாதைகளை ஆக்கிரமிக்கின்றனர். இதற்கு நகராட்சி நிர்வாகமும், போக்குவரத்து காவல்துறையும் இணைந்து நிரந்தர தீர்வுகாண வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பாதசாரிகளும் எதிர்பார்த்துள்ளனர்.

Tags :
× RELATED துபாய் வெள்ளத்தில் மகன் உயிரிழந்த...