×

பொதுமக்கள் கோரிக்கை பெரம்பலூர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் 2வது நாளாக வேலைநிறுத்தம்

பெரம்பலூர், டிச. 12: ஆன்லைன் கட்டணம் வழங்காததை கண்டித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 2ம் நாளான நேற்றும் போராட்டம் தொடர்ந்தது. போராட்டம் குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வினியோகித்தனர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் கிராம நிர்வாக அலுவலர்கள் செய்து வரும் கணினிவழிச் சான்றுகள் மற்றும் இணையதள பணிகளுக்கு செலவினத்தொகை மற்றும் வசதிகள் செய்து தரவேண்டும். விஏஓ பணியிடத்திற்கான கல்வித்தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறுகட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த நவம்பர் 28ம் தேதி முதல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் சான்றிதழ்கள், பட்டா மாறுதல் உள்ளிட்ட 14 சேவைகள் வழங்குவதை நிறுத்தினர். 2ம் கட்டமாக தாலுகா தலைநகரங்களில் 5ம் தேதி மாலை 6 மணி முதல் 6ம் தேதி காலை 6 மணிவரை இரவுநேர தர்ணா போராட்டம் நடத்தினர். 3ம் கட்டமாக 7ம் தேதி பெரம்பலூர் கலெக்டர்அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். அதன் பின்னரும் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாததால் பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 10ம் தேதி முதல் 83 கிராம நிர்வாக அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

போராட்டத்தின் 2ம் நாளான நேற்று தங்கள் போராட்டங்களை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் பெரம்பலூர் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், ஆலத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் ராஜா, வேப் பந்தட்டை தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளர் ரெங்கராஜ், குன்னம் தாலுகா அலுவலகம் முன்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அகிலன் ஆகியோர் தலைமையில் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். கிராம நிர்வாக அலுவலர்கள் நடத்தும் வேலைநிறுத்த போராட்டத்தால் வருவாய் துறையால் மேற்கொள்ளப்படும் ஒட்டுமொத்த பணிகளும் பாதிக்கப்பட்டு பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Tags : Village Clerks ,Perambalur District ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி