×

தேங்காய் மட்டையில் இருந்து நார் பிரித்தெடுக்கும் தொழில்கள் பாதிப்பு வங்கி கடனை தள்ளுபடி செய்ய வியாபாரிகள் கோரிக்கை

ஆலங்குடி, டிச.12: ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் கஜா புயலின் கோரதாண்டவத்தால் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால், தேங்காய் மட்டையில் இருந்து நார் பிரித்தெடுப்பது, நார் பிரித்தெடுக்கும்போது கிடைக்கும் தூள்களை கேக்செய்வது போன்ற தொழில்களும் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால்  வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலங்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு விவசாய சார்ந்த பகுதியாகும். விவசாய விளைபொருட்கள் அனைத்தும் விற்பனை செய்யும் சந்தையாகவும் ஆலங்குடி திகழ்ந்து வந்தது.  நிலக்கடலை வியாபாரம் நன்றாக நடந்தது. தற்போது அது முடங்கி போயுள்ளது.

இதனால் தொழிலில் மாற்றத்தை விரும்பிய வியாபாரிகள் ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, நெடுவாசல், அணவயல், கொத்தமங்கலம், கீரமங்கலம், சேந்தன்குடி, நகரம் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்தும், அதேபோல தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தேங்காய் மட்டைகளை லாரிகளில் ஏற்றிவந்து, தேங்காய் தேங்காய் மட்டையில் இருந்து நார் பிரித்தெடுப்பது, நார் பிரித்தெடுக்கும்போது கிடைக்கும் தூள்களை கேக்செய்வது போன்ற தொழில்களில் ஆர்வம் காட்டினர். இவ்வாறு தயாரிக்கப்படும் கேக்குகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இதனால் ஓரளவு பணப்புழக்கம் இருந்தது. மேலும், இந்த தொழிற்சாலைகளில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் கடந்த நவ.16-ம் தேதி வீசிய கஜா புயலின் கோரதாண்டவத்தால் புதுக்கோட்டை, தஞ்சாவூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்த லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன.

இதனால், விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதோடு, தேங்காய் மட்டையும் கிடைக்காமல் உள்ளது. இதனால், கஜா புயலின் போது பெரும் பாதிப்புக்குள்ளான தேங்காய் மட்டையிலிருந்து நார் மற்றும் கேக் தாயாரிக்கும் தொழிற்சாலைகளை சீரமைக்காமலேயே உள்ளனர்.இந்த தொழிலை நம்பியிருந்த வியாபாரிகளும், ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளர்களும் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்னைநார் தொழிற்சாலைகளை நடத்திவரும் வியாபாரிகள் சிலர் கூறுகையில், . வங்கிகளில் கடன் பெற்று தொழில் நடத்திவந்த வியாபாரிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் மட்டுமின்றி இந்த தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் ஆயிரக்கணக்கான கூலி தொழிலாளிகளும் பாதிப்படைந்துள்ளனர்.

எனவே, தமிழக அரசு தேங்காய் மட்டையிலிருந்து, நார் பிரித்தெடுப்பது, நார் பிரித்தெடுக்கும்போது கிடைக்கும் தூள்களை கேக்செய்வது போன்ற தொழிலுக்காக வங்கியில் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Traders ,coconut bakery ,
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...