புயலால் பாதித்த அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரண பொருட்கள் வழங்ககோரி பொதுமக்கள் மறியல்

பேராவூரணி, டிச.12: கஜா புயலால் பாதித்த அனைவருக்கும் பாரபட்சமின்றி நிவாரணம் வழங்க வலியுறுத்தி பேராவூரணியில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். கஜா புயல் கோரதாண்டவத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கூரை, ஓட்டு வீட்டில் வசிக்கும் ஒரு சிலருக்கு மட்டுமே அரசின் நிவாரணம் வழங்கப்படுகிறது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள அரசின் தொகுப்பு வீட்டில் வசிப்போர், மாடி வீட்டில் வசிப்போருக்கு நிவாரணம் வழங்கவில்லை. இதனால் கணக்கெடுப்பில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் கிராம உதவியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே பல்வேறு இடங்களில் பிரச்னை ஏற்பட்டது.

இந்நிலையில் பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட 16, 17, 18 ஆகிய வார்டுகளில் வசிக்கும் 3,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினரில் மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 750 குடும்பங்களுக்கு மட்டுமே நிவாரண பொருட்கள் வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த பொன்னாங்கண்ணிக்காடு, மாவடுகுறிச்சி பகுதிகளை சேர்ந்த 100 பெண்கள் உள்ளிட்ட 250 பேர், பேராவூரணி- புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் மண்டல துணை தாசில்தார் யுவராஜ், காவல்துறை ஆய்வாளர் பரமானந்தம், உதவி ஆய்வாளர் கார்த்திக் மற்றும் அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை ஏற்க மறுத்த பொதுமக்கள், கிராம நிர்வாக அலுவலர் இங்கு வந்து நிவாரணம் பெறுவோர் பட்டியலை வழங்க வேண்டுமென வலியுறுத்தினர்இதையடுத்து பொதுமக்களிடம் பேராவூரணி வருவாய் ஆய்வாளர் அஷ்ரப் அலி கூறுகையில், 1,032 குடும்பங்கள் நிவாரணம் வழங்க தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். இதில் 859 பேருக்கு நிவாரண பொருட்கள் வந்துள்ளது. சிலருக்கு ஆதார் அட்டை, வங்கி கணக்கு தவறுகளால் விடுபட்டவர்களுக்கு மறு கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கப்படும் என்றார். இதையடுத்து மறியலை பொதுமக்கள் கைவிட்டனர். மறியல் போராட்டத்தால் பேராவூரணி- புதுக்கோட்டை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாப்பாநாட்டில் பெண்கள் மறியல்: அதிமுகவை சேர்ந்த பணக்காரர்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கும் கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியோரை கண்டித்து ஒரத்தநாடு தாலுகா பாப்பாநாடு, சோழகன்கரை கிராம பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் பாப்பாநாடு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், ஒரத்தநாடு தாசில்தார் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பணக்காரர்களுக்கு மட்டும் ஆதரவாக செயல்படும் கிராம நிர்வாக அதிகாரி, வருவாய் ஆய்வாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோஷமிட்டனர்.பின்னர் ஒரத்தநாடு டிஎஸ்பி காமராஜ், இன்ஸ்பெக்டர்கள் மணிவண்ணன், ஹேமலதா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் ேபச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர். பொதுமக்களின் மறியல் போராட்டத்தால தஞ்சை - பட்டுக்கோட்டை சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: