கும்பகோணம் பகுதியில் திருமண உதவித்தொகை வாங்குவதற்காக ஓராண்டாக காத்திருக்கும் பொதுமக்கள் போராட்டம் நடத்த மகளிர் அமைப்பு முடிவு

கும்பகோணம், டிச.12: கும்பகோணம் பகுதியில் ஓராண்டாகியும் திருமண உதவித்தொகை வழங்காமல் அலைகழித்து வருகின்றனர். எனவே விரைந்து வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று மகளிர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.ஏழை பெண்களின் திருமணங்களுக்கு ரூ.50 ஆயிரம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்து ெசயல்படுத்தினார். இதற்காக திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினரின் திருமண பத்திரிக்கை, வயது சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வழங்க வேண்டும். பின்னர் அங்குள்ள அலுவலர், திருமணம் செய்து கொள்ளும் பெண் வசிக்கும் பகுதிக்கு சென்று விசாரணை செய்து உண்மையா என்பதை ஊர்ஜிதம் செய்து மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும். அதன்பின் 6 மாதத்துக்ள் முதல்கட்டமாக தங்க நாணயம், தொடர்ந்து ரூ.50 ஆயிரம் காசோலை வழங்கப்படும்.இந்நிலையில் கும்பகோணம் ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சி மற்றும் 3 பேரூராட்சியில ்உள்ள 1000க்கும் மேற்பட்ட பெண்கள் திருமண உதவித்தொகை கேட்டு 13 மாதங்களாக காத்திருக்கின்றனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு சென்று கேட்டால் உரிய பதிலளிக்காமல் அலைகழிக்கின்றனர்.

இதுகுறித்து மகளிர் அமைப்பை சேர்ந்த கலா கூறுகையில், ஏழை பெண்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள் கஷ்டப்படக்கூடாது என்ற காரணத்தால் திருமண உதவித்தொகை அரசால் வழங்கப்படுகிறது. இந்த திருமண உதவித்தொகை வாங்குவதற்காக திருமண பத்திரிக்கை உள்ளிட்ட சான்றிதழ்களை அலுவலகத்தில் வழங்கியவுடன் அங்குள்ள பெண் அலுவலர் ஆட்டோவில் வந்து சரியாக உள்ளதா என ஆய்வு செய்துவிட்டு ஆட்டோ வாடகை ரூ.150, பெண் அலுவலருக்கு ரூ.350 பணத்தை பெற்று கொண்டு சரியாக உள்ளது என கையெழுத்திட்டு சென்று விடுகிறார்கள். பின்னர் 6 மாதத்தில் பணம் கிடைத்துவிடும் என உறுதியளித்து செல்வதால் கடன் வாங்கி மகளுக்கு திருமணம் செய்த ஏழை பெற்றோர்கள், மகள் திருமணத்துக்கு வாங்கிய பணத்துக்கு வட்டி கட்டி கொண்டு வருகிறார்கள்.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கேட்டால் இன்னும் ஓராண்டுக்கு மேலாகும் என்கின்றனர். எனவே திருமண உதவித்தொகை கேட்டு பல மாதங்களாக காததிருக்கும் பெண்களுக்கு உடனடியாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பெண்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றார்.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்பாபு கூறுகையில், திருமண உதவித்தொகை வாங்குபவர்கள் திருமணத்துக்கு 10 நாட்களுக்கு முன்பு பதிவு செய்ய வேண்டும். தற்போது அனைத்து பதிவுகளும் ஆன்லைனில் செய்வதால் சீனியாரிட்டி முறையில் தான் உதவி தொகை வருகிறது. தற்போது காத்திருப்பவர்களுக்கு திருமண உதவித்தொகை வருவதற்கு குறைந்தது 6 மாதம் முதல் ஓராண்டாகும் என்றார். அனைத்து பதிவுகளும் ஆன்லைனில் செய்வதால் சீனியாரிட்டி முறையில் தான் உதவி தொகை வருகிறது. தற்போது காத்திருப்பவர்களுக்கு திருமண உதவித்தொகை வருவதற்கு குறைந்தது 6 மாதம் முதல் ஓராண்டாகும்.

Related Stories: