×

தாராசுரம் கோயில் அருகே செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு மக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

கும்பகோணம், டிச. 12: தாராசுரத்தில் தொல்லியல் துறை விதிமுறைகளை மீறி செல்போன் டவர் அமைக்க முயன்றதை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.கும்பகோணம் அடுத்த தாராசுரத்தில் உலக புகழ்பெற்ற ஐராவதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டு தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. எனவே கோயில் அமைந்துள்ள பகுதியில் தொல்லியல் துறை அனுமதி பெறாமல் புதிய கட்டுமான பணிகள் எதுவும் செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது.இந்நிலையில் சுவாமி சன்னதி தெருவில் தனியார் செல்போன் டவர் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று செல்போன் டவருக்கான அஸ்திவாரம் தோண்டும் பணி துவங்கியது. இந்த தகவல் அறிந்ததும் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் 200க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று அஸ்திவாரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சுவாமி சன்னதி தெரு, மிஷின் தெரு, கீழத்தெரு, ராணுவ காலனி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர். இந்த தகவல் கிடைத்ததும் தாராசுரம் கோயிலில் பணியாற்றும் தொல்லியல் துறை அலுவலர்கள் மூர்த்தி, பிரபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று செல்போன் டவர் அமைக்க அனுமதி வழங்கவில்லை. எனவே கோயில் இருக்கும் இடத்தில் இருந்து 300 மீட்டர் அளவுக்குள் பணிகள் செய்ய அனுமதியில்லை என்று தடுத்து நிறுத்தினர். இதன்காரணமாக டவர் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டது.

Tags : protesters ,temple ,Darasuram ,cellphone tower ,
× RELATED தேவிபட்டணம் காளியம்மன் கோயில் குளத்தை அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பு