×

திருவானைக்காவல் கோயில் கும்பாபிஷேகம்

திருச்சி, டிச.12:  திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெறுகிறது. பஞ்ச பூதங்களில் நீர்தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கு 18 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு சுமார் ரூ.5 கோடி மதிப்பில் உபயதாரர்கள் மூலம் புனரமைப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து 2 கட்டங்களாக மகா கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறையினர் முடிவு செய்து, இக்கோயில் பாிவார மூர்த்திகளுக்கு முதல்கட்ட கும்பாபிஷேகம் கடந்த 9ம் தேதி நடைபெற்றது.  2ம் கட்டமாக ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி மூலஸ்தானங்கள் மற்றும் ராஜகோபுர விமான மகா கும்பாபிஷேகம் இன்று (12ம் தேதி) காலை 6.30 மணி முதல் 7.15 மணிக்குள் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி, யாக குண்டங்கள் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டு, கடந்த 9ம் தேதி இரவு முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. 10, 11ம் ேததிகளில் 2, 3 மற்றும் 4, 5ம் கால யாக பூஜைகள் நடந்தன. இன்று காலை 6ம் கால பூஜையை தொடர்ந்து தீபாராதனையுடன் கடங்கள் புறப்பட்டு சகல ராஜகோபுரம் மற்றும் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் விமானங்களுக்கு 6.30 மணி முதல் 7 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து சுவாமி, அம்மன் மூலஸ்தானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

 பாதுகாப்பு பணியில் 700 போலீசார்கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 2 துணை கமிஷனர்கள் தலைமையில் 7 உதவி கமிஷனர்கள், 22 இன்ஸ்பெக்டர்கள், 81 எஸ்ஐக்கள் உள்பட  700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பக்தர்கள் வாகனங்களை நிறுத்த கன்னிமார் தோப்பு, ஒத்ததெரு, நன்று தரும் விநாயகர் கோயில் அருகில் கார்த்திகேயன் கார்டன் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவசர சிகிச்சைக்கு ஏதுவாக டாக்டர் தலைமையில் மருத்துவக்குழு மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகனம் திருவானைக்காவல் கோயில் ஆயிரங்கால் மண்டபம் அருகே தயார்நிலையில் உள்ளன. மாநகராட்சி சார்பில் 6 இடங்களில் நடமாடும் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.


Tags : Kumbabhishekam Temple ,
× RELATED திருமழிசை குளிர்ந்த நாயகி ஸமேத...