சம்பளம் வழங்காததை கண்டித்து பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சி, டிச.12: சம்பளம் வழங்காததை கண்டித்து திருச்சியில் பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் கண்களில் கறுப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தில் பிஎஸ்என்எல் அலுவலகங்களில், துப்புரவு பணி, ஹவுஸ் கீப்பிங், டேபிள் என பல்வேறு பணிகளில் 5,000 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 8 மணி நேரமாக இருந்த பணி நேரத்தை 6 மணி நேரமாக குறைத்து, மாதம் ரூ.7,000 சம்பளம் என நிர்ணயித்து பிஎஸ்என்எல் நிர்வாகம் வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த மாத சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை. இதை கண்டித்தும், பணி நேரத்தை 6 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாக மாற்றி, சம்பளத்தை உயர்த்தி தரவேண்டும்.

இபிஎப், இஎஸ்ஐ கட்டக்கோரியும் தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் பிஎஸ்என்எல் அலுவலகங்களில் நேற்று நடந்தது. தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் திருச்சி பிஎஸ்என்எல் அலுவலக வாயில் முன் கண்களில் கறுப்புத்துணி கட்டிக்கொண்டு 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். செயலாளர் முபாரக் அலி, பொருளாளர் சண்முகம், பிஎஸ்என்எல் எம்ப்ளாயிஸ் யூனியன் மாவட்ட செயலாளர் அஸ்லம்பாட்ஷா உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: