கோமாரி நோய் எச்சரிக்கையால் தடை புதன்சந்தை மாட்டுச்சந்தை வெறிச்சோடியது வியாபாரிகள், தொழிலாளர்கள் பரிதவிப்பு

சேந்தமங்கலம், டிச.12: கோமாரி நோய் பரவுவதை தடுக்க, நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை சந்தைகளுக்கு வரும் 21ம் தேதி வரை தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளதால், நேற்று புதன்சந்தையில் மாட்டுச்சந்தை கூடவில்லை. நாமக்கல் மாவட்டத்தில் மோர்பாளையம், புதன்சந்தை ஆகிய இடங்களில் வாரந்தோறும் மாட்டுச்சந்தை கூடுகிறது. இதில் புதன்சந்தையில் செவ்வாய்க்கிழமைதோறும் கூடும் மாட்டுச்சந்தை, தமிழக அளவில் பெரிய சந்தை ஆகும். கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் மாடுகளை வாங்க, விற்க வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதமாக தமிழகத்தில் கால்நடைகளை கோமாரி நோய் தாக்கி வருகிறது. கால்நடைத்துறையினர் சிறப்பு முகாம்களை நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து வெளிமாநில கால்நடைகள் ஓரிடத்தில் கூடுவதால் நோய் பரவுவது அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தையை தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம் மோர்பாளையம், புதன்சந்தையில் மாட்டுச்சந்தை நடத்த கலெக்டர் ஆகியா மரியம் தடை விதித்து உத்தரவிட்டார். இதனால், தொடர்ந்து 2 வாரமாக நேற்று புதன்சந்தை மாட்டுச்சந்தை கூடவில்லை.

இந்நிலையில், சந்தையை வரும் 21ம் தேதி வரை நடத்த தடை விதித்து மீண்டும் கலெக்டர் ஆசியா மரியம் அறிவித்தார். இதையடுத்து ேநற்று புதன்சந்தையில் மாட்டுச்சந்தை கூடவில்லை. வெறிச்சோடிக் காணப்பட்டது.

இதனால், வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர். பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் உரிய நோய் தடுப்பு நடவடிக்கை எடுத்து, மாட்டுச்சந்தையை விரைவில் நடத்த ஏற்பாடு செய்யவேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: