×

ராயக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு லாரியை சிறை பிடித்து மக்கள் போராட்டம்

கிருஷ்ணகிரி, டிச.12:   கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே அயர்னப்பள்ளி ஊராட்சியில் நல்லராலப்பள்ளி கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடந்த அக்டோபர் மாதம் கலெக்டர் அலுவலகதில் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் அங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் அப்போது டாஸ்மாக் கடை திறக்கப்படாமல் மூடப்பட்டது. இதற்கிடையே நேற்று முன்தினம் நல்லராலப்பள்ளி கிராமத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு மது விற்பனை நடந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும், நல்லராலப்பள்ளி, கொத்தூர், பாலேபுரம், அளேசீபம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை டாஸ்மாக் கடை அமைந்துள்ள பகுதியில் திரண்டனர். அவர்கள் கடையை திறக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அப்போது கடைக்கு மதுபாட்டில்களை இறக்குவதற்காக வந்த மினி லாரியை சிறைபிடித்தனர். தகவல் அறிந்து வந்த ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சிவலிங்கம், எஸ்ஐ வெங்கடேசன் மற்றும் போலீசார், போராட்டம் நடத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மக்கள் கூறியதாவது:

எங்கள் பகுதியில் பள்ளிகள், கோவில்கள் உள்ளன. இந்த பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதால் பலரும் பாதிக்கப்படுவார்கள். மது குடிக்கும் நபர்களால் எங்கள் பகுதியில் உள்ள பெண்கள் கேலி, கிண்டலுக்கு உள்ளாவார்கள். இதனால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும். எனவே, எங்கள் பகுதியில் மதுக்கடையை திறக்கக்கூடாது என கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தோம். ஆனாலும் கடையை திறந்து விற்பனையை தொடங்கி உள்ளனர். இங்கு டாஸ்மாக் கடையை திறக்க கூடாது. அவ்வாறு திறந்தால் சுற்று வட்டார கிராம மக்களை திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம், என்றனர்.  போலீசார் தரப்பில், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர்.


Tags : shop ,Raikkottai ,Tasmag ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி