மதுரை ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்

மதுரை, டிச. 12: மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்களில் கீழ்படுக்கை ஒதுக்கீடுகளை அதிகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் அலுவலகத்தை, மாற்றுத்திறனாளிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்துலக மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கம் ரயில்வே நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு செய்திருந்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு ரயில்களில் கீழ்படுக்கை ஒதுக்கீடுகளை அதிகப்படுத்த வேண்டும்.  ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின்படி அரசு தரும் அடையாள அட்டையையே நாடு  முழுவதும் ஏற்க வேண்டும். ரயில் பயணச்சீட்டு வழங்கும் மையத்தில்  ஊழியர்களால் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்பட  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

ஆனால் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு எதிர்பு தெரிவிக்கும் வகையில், மதுரை கோட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று காலை காலை 11 மணியளவில், அமைப்பின் மாநில செயலாளர் வின்சென்ட் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் மதுரை ரயில் நிலையத்திலுள்ள கோட்ட மேலாளர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர், ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தனி கழிவறை வசதி செய்து தர வேண்டும், ரயில்வே துறை வேலை வாய்ப்பில் 4 சதவீத இடஒதுக்கீடு வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு தனிப்பெட்டிகள் ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி, கோட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  இதைத்தொடர்ந்து மேலாளர் நினு இட்டியேராவிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். இதில், நிர்வாகிகள் பகத்சிங், முத்துகாந்தாரி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: