அரசரடியில் 153 ஆண்டுகளாக நீடிக்கும் சென்ட்ரல் ஜெயில் இடம் மாறுமா?

மதுரை, டிச. 12: சென்னையில் ஜெயில் புழலுக்கு மாறியது போல், மதுரை அரசரடியில் 153 ஆண்டுகளாக நீடிக்கும் சென்ட்ரல் ஜெயில் இடம் மாறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மதுரை மாநகரில் நெருக்கடியை குறைக்கும் நோக்குடன் மைய பகுதியில் இருந்த பஸ்ஸ்டாண்ட், சென்ட்ரல் மார்க்கெட், பூ மார்க்கெட், பழ மார்க்கெட்டுகள் மாட்டுத்தாவணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அரசரடியிலுள்ள சென்ட்ரல் ஜெயில் மட்டும் 153 ஆண்டுகளாக ஒரே இடத்தில் நீடிக்கிறது. இந்த ஜெயில் 1865ம் ஆண்டு 31 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்பட்டது. சுற்றிலும் ஜெயில் டி.ஐ.ஜி., சூப்பிரெண்டு பங்களா மற்றும் முரட்டன்பத்திரியில் ஜெயில் ஊழியர் குடியிருப்புகள் அமைந்துள்ளன.  இங்கு ஜெயில் உருவாக்கிய காலகட்டத்தில் அந்த பகுதி ஆள் நடமாட்டமில்லாமல் புறவெளிப்பகுதியாக இருந்தது. அப்போது இங்கு அடைக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கையும் குறைவு. தற்போது ஜெயிலின் உள்ளேயும், வெளியிலும் நெருக்கடி அதிகரித்து கொண்டே போகிறது. சுமார் 1,300 கைதிகளையே அடைக்க முடிகிறது. மதுரை மாவட்டம் மட்டுமின்றி தென் மாவட்ட கைதிகளும் இங்கு சிறை வைக்கப்படுகின்றனர். ஜெயில் காம்பவுண்டு சுவர் பிரதான சாலையின் ஓரமாக அமைந்துள்ளது. இதனால் சாலையில் இருந்து ஜெயிலுக்குள் சட்டவிரோத பொருட்கள் வீசும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. ஜெயிலுக்கு வெளியிலும் சாலையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தும் சூழல் நிலவுகிறது. சமீபத்தில் தொடர்ந்து 2 முறை போலீசார் ஜெயிக்குள் சோதனை நடத்தி சட்ட விரோத செயல்களை தடுக்கும் அளவுக்கு நிலைமை முற்றியுள்ளது.

இதன் விளைவு ஜெயிலுக்கு வெளியே புது ஜெயில் ரோட்டில் செல்லும் பொதுமக்களும், அதனை சுற்றிய குடியிருப்புவாசிகளும் பல்வேறு வகையில் போலீசாரின் கெடுபிடிக்கு உள்ளாகின்றனர். புது ஜெயில் ரோட்டில் நின்றுகூட பொதுமக்கள் செல்பேச போலீசார் தடை விதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், புது ஜெயில் ரோட்டில் போக்குவரத்துக்கே தடை விதிக்கும் மோசமான நிலை ஏற்படுமோ? என்ற அச்சம் நிலவுகிறது. அருகில் ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்ட் நெருக்கடியில் சிக்கி திணறுகிறது. சுற்றிலும் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், மார்க்கெட், வர்த்தக நிறுவனங்கள் நிறைந்துவிட்டன. பல்வேறு வகையிலும் முக்கியத்துவம் பெற்ற இந்த பகுதியின் மத்தியில் ஜெயில் வளாகம் அமைந்துள்ளது. சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் நீண்ட காலமாக இருந்த சென்ட்ரல் ஜெயில் நெருக்கடியை தவிர்க்க 12 ஆண்டுக்கு முன் புழலுக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதேபோல் மதுரை ஜெயிலையும் இடம் மாற்றம் செய்து நெருக்கடிக்கு தீர்வு காணலாம் என பல ஆண்டுகளுக்கு முன் கலெக்டர் தலைமையிலான போக்குவரத்து ஆலோசனை கமிட்டி கூட்்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலூர் அல்லது செக்கானூரணி  அருகில் சென்ட்ரல் ஜெயில் பெரிய அளவில் கட்டலாம் என அதிகாரிகள் யோசனை தெரிவித்து, அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அந்த திட்டம் கிடப்பில் கிடக்கிறது. போக்குவரத்து மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “ஜெயில் நகரின் வெளிப்பகுதிக்கு மாறினால் அரசரடியில் அரசு மற்றும் மாநகராட்சியின் பொது பயன்பாட்டுக்கும், போக்குவரத்து நெருக்கடிக்கும் தீர்வு காண முடியும். குறிப்பாக ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்டை அரசரடிக்கு மாற்றலாம்” என்றனர்.

மீனாட்சி கோயில் அருகில் இருந்து மாறியது

ராணி மங்கம்மாள் ஆட்சி காலம் வரை சென்ட்ரல் ஜெயில் மீனாட்சி அம்மன் கோயில் அருகிலேயே இருந்துள்ளது. அங்கு ராணி மங்கம்மாள் சிறை வைக்கப்பட்ட அறை இன்றைக்கும் புராதன சின்னமாக உள்ளது. இங்கிருந்த ஜெயில் அரசடிக்கு இட மாற்றம் செய்யப்பட்டது. ஜெயில் இருந்த இடத்தில் சென்ட்ரல் மார்க்கெட் உருவாகி, அதுவும் 2010ல் மாட்டுத்தாவணிக்கு மாறியது. பழைய சென்ட்ரல் மார்க்கெட்டிலுள்ள காளியம்மன்கோயில் இன்றைக்கும் “ஜெயில் காளியம்மன் கோவில்” என்றே அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: