குண்டும் குழியுமான ரோடுகளில் தூசி மதிப்பீட்டு குழு அதிருப்தி: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மதுரை, டிச. 12: மதுரையில் 2 நாட்கள் ஆய்வு செய்த சட்டமன்ற மதிப்பீட்டு குழு ரோடுகள் குண்டும் குழியுமாக தூசி பறப்பதாக அதிருப்தி தெரிவித்தது. தமிழக சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு தலைவர் தோப்பூர் வெங்கடாச்சலம் எம்எல்ஏ தலைமையிலான குழு நேற்று முன்தினம் மதுரை வந்தது. இக்குழுவில் திமுக எம்எல்ஏக்கள் பொன்முடி, காந்தி, கருணாநிதி, காளிமுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் சி.வி.ராஜேந்திரன், சத்யா, பெரியுள்ளான், மாணிக்கம், சரவணன் உள்ளிட்டோர் வந்திருந்தனர். இவர்களுடன் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திமுக எம்எல்ஏ மூர்த்தி ஆகியோர் உடன் வந்தனர். இக்குழுவினர், நேற்று முன்தினம் மதுரை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு திட்டப் பணிகளை பார்வையிட்டனர். இதைத்தொடர்ந்து நேற்று, மதுரை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. மதிப்பீட்டு குழு தலைவர் தோப்பு வெங்கடாச்சலம் தலைமையில் நடந்த கூட்டத்தில் குழு உறுப்பினர்கள், கலெக்டர் நடராஜன், மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் குழு தலைவர் தோப்பு வெங்கடாச்சலம் பேசும்போது, ‘‘மதுரைக்கு வரும் முக்கிய ரோடுகள் குண்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது. நகரில் உள்ள ரோடுகளில் எங்கு பார்த்தாலும் தூசி பறக்கிறது. ஒரு நகரம் என்றால், அதற்கு ரோடு மிகவும் முக்கியம். அந்த ரோடு மோசமானதாக இருக்கக் கூடாது. இப்படி இருந்தால், மாநகர் எப்படி வளர்ச்சி பெற முடியும்?’’ என வேதனை தெரிவித்தார். திமுக எம்எல்ஏ மூர்த்தி பேசும்போது, ‘‘மதுரை புறநகர் பகுதிகள் மாநகராட்சி பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிக்கு முறையான பாதாளசாக்கடை வசதி இல்லை. குடிநீர் வசதியும் சரியாக செய்து தரப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அடிப்படை வசதி கேட்டு போராடி வருகின்றனர்’’ என்றார். பின்பு ஒவ்வொரு துறையிலும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு நடந்தது. கூட்டத்திற்கு பின்பு குழு தலைவர் தோப்பு வெங்கடாச்சலம் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘அரசின் திட்டகளில் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு நடத்தினோம். நிதிஒதுக்கீடு செய்து, முடிந்த பணிகள். நடக்கும் பணிகள், முடிக்க வேண்டிய பணிகள் என பிரித்து ஆய்வு செய்யப்பட்டது. மதுரையில் ரோடுகள் மோசமாக உள்ளது. இதை குற்றச்சாட்டாக கூறவில்லை. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்கிறேன். எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனைத்து பணிகளும் நடந்து வருகிறது. நிதி ஒதுக்கீடு செய்து அமைச்சரவை ஒப்புதல் கிடைத்தவுடன் பணிகள் துவங்கும் என தெரிகிறது’’ என்றார்.

Related Stories: