மதுரை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் டெலிபோன் எக்சேஞ் அமைக்க கோரிக்கை

மதுரை, டிச. 12: சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் டெலிபோன் எக்சேஞ் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது. தென்மாவட்ட அளவில் மதுரை அரசு மருத்துவமனை மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சிவகங்கை, தேனி போன்ற மருத்தவக்கல்லூரி மருத்துவமனைகளில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். அந்த அளவிற்கு இம்மருத்துவமனையில், சிறப்பு மருத்துவர்களும், மருத்துவப்பிரிவுகளும் உள்ளன. ஆனால் இன்றைய சூழலுக்கேற்ப பல்வேறு வசதிகள் இம்மருத்துவமனையில் இல்லை. இதற்கு இங்குள்ள டெலிபோன் எக்சேஞ் மையத்தை உதாரணமாக கூறலாம். மதுரை அரசு மருத்துவமனையில் ஆதிகாலத்திலிருந்தே ஒரே ஒரு டெலிபோன் எக்ேசஞ்தான் உள்ளது. மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி, விபத்து பிரிவு மற்றும் தலைக்காயப்பிரிவுகள் செயல்பட்டு வரும் விரிவாக்க மருத்துவமனை மற்றும் விரைவில் செயல்பாட்டுக்கு வரஉள்ள, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை என அனைத்திற்கும், இந்த ஒரு டெலிபோன் எக்சேஞ்தான் பயன்பாட்டில் உள்ளது.

விரிவாக்க மருத்துவமனையில் 38 உள் இணைப்புக்களும் (எக்ஸ்டன்சன்), சூப்பர் ஸ்பெஷாலிட்டியில் 250 உள் இணைப்புக்களும் உள்ளன. அனைத்து இடங்களிலிருந்தும் பல்வேறு தகவல்களுக்காக இந்த எக்சேஞ்சை தொடர்பு கொள்ளும்போது, பல்வேறு தடங்கல்கள் ஏற்படுகிறது. குறிப்பாக விபத்திற்குள்ளாகி, எலும்பு முறிவோ, தலைக்காயமோ ஏற்பட்ட, ஒருவர், விரிவாக்க மருத்துவமனையில் இருந்தால், அவர் எந்த வார்டில் உள்ளார் என்ற விபரத்தை, போலீசாரோ, உறவினர்களோ தெரிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. சென்னை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ள அரசு மருத்துவமனைகளில், மருத்துவமனைக்கும், மருத்துவக்கல்லூரிக்கும் தனித்தனியாக டெலிபோன் எக்சேஞ்சுகள் உள்ளன. ஆனால் மதுரையில் மட்டுமே ஒரே ஒரு எக்சேஞ் உள்ளது.

மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் கூறும்போது, ``மதுரை அரசு மருத்துவமனையிலிருந்து, மருத்துவக்கல்லூரி மற்றும் விரிவாக்க மருத்துவமனையை தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. மேலும் விரைவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் திறக்கப்பட உள்ளது. அதில் டெலிபோன் எக்சேஞ்சுக்கு இடம் ஒதுக்கப்படவில்லை. இதனால் மேலும் சிரமம் அதிகரிக்கும். வெளியிலிருந்து ஒரு அமைச்சர், கலெக்டர், அதிகாரிகள் அல்லது உறவினர்கள் ஒரு நோயாளி குறித்து தகவல் கேட்கும் நிலையில், சம்பந்தப்பட்ட வார்டை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுவிடும். இதைத் தடுக்க, சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், ஒரு டெலிபோன் எக்சேஞ்சை அமைத்து, மருத்துவக்கல்லூரி மற்றும் விரிவாக்க மருத்துவமனையை அதனுடன் இணைத்தவிட்டால், இன்னும் கூடுதலாக உள் இணைப்புக்களை கொடுத்து, டெலிபோன் சேவையை முழுமையாக பெறலாம்’’ என்றனர்.

Related Stories: