×

பயிரை உலர வைக்க களங்கள் இல்லை

திருமங்கலம், டிச. 12: தானியங்கள் மற்றும் பயிரை உலரவைக்க சாலைகளை பயன்படுத்தி ஏற்படும் விபத்துகளை தவிர்க்க உலர் களங்களை அமைத்து தரவேண்டும் என திருமங்கலத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. மண்டல துணை தாசில்தார் அழகர்சாமி தலைமையில் கூட்டம் நடந்தது. தலைமையிடத்து துணைதாசில்தார் முத்துலட்சுமி முன்னிலை வகித்தார். மதிப்பனூரினைச் சேர்ந்த விவசாயி வரதராஜன், கதிரேசன் பேசுகையில், ‘மதிப்பனூர், அலப்பலசேரி, தங்களாசேரி, சவுடார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்காசோளத்தில் படைபுழுதாக்குதல் அதிகம் உள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பயிர் இழப்பு ஏற்பட்டுள்ளது. காப்பீடு தரமுடியாது என்கின்றனர் வேளாண்மை அதிகாரிகள்’ என்றனர். இதுகுறித்து பதில் அளித்த திருமங்கலம் உதவிவேளாண்மை அலுவலர் ஞானவேல் ஆகஸ்ட் மாசத்துடன் கரீப் பருவம் முடிவடைந்து விடுகிறது. ஆனால் நீங்கள் அனைவரும் அக்டோபர், நவம்பரில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளீர்கள். இதனால் இன்சூரன்ஸ் வழங்க இயலாது. படைப்புழுக்கள் 6 பருவமாக வளரக்கூடியவை. இதில் இளம்புழுக்களை வேண்டுமானால் அழிக்கலாம். முதிர்வடைந்த புழுக்களை அழிக்க முடியாது. வருங்காலத்தில் தமிழக விவசாயிகளின் நலன்கருதி கரிப்பருவத்தினை நவம்பர் மாதம் வரையில் நீடிக்க வழிவகை செய்கிறோம்’ என்றார்.

ஆலம்பட்டியை சேர்ந்த வெள்ளையன் கூறுகையில், ‘ஆலம்பட்டி, ராயபாளையம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுபன்றிகள் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றனர். வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பன்றிகளை சுட்டுக்கொல்ல வேண்டும்’ என்றார். உசிலை வனவர் கிருஷ்ணமூர்த்தி பதில் அளிக்கையில் காட்டுப்பன்றிகளை வனத்துறையினர் சுட்டுவிழ்த்த முடியும். தமிழகத்தில் அதற்குரிய சட்டம் இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் விவசாய்கள் யாரும் பன்றியை சுட்டுக்கொள்ள வேண்டும் என எழுத்து பூர்வமாக மனுக்கொடுக்கவில்லை. இதனால் இந்த திட்டம் நடைமுறை படுத்த முடியவில்லை. காட்டுபன்றி தாக்குதல் ஏற்பட்டால் இழப்பீடு தொகையை குறித்து விஏஓ, ஆர்ஐ மதிப்பீடு செய்து தருவர், அதற்கு தகுந்த இழப்பீடு நாங்கள் தருகிறோம்’ என்றார். விவசாயி கதிரேசன் பேசுகையில், ‘விவசாயிகளுக்கு தானியங்கள், பயிர்களை உலரவைக்க கிராம பகுதியில் களம் இல்லை. இதனால் சாலைகளில் அவற்றை காய வைக்கிறோம். இதனால் அதிகளவில் விபத்துகள் உண்டாகிறது. சாலையில் தானியங்களை காய வைக்காதீர்கள் என போலீசார் எச்சரிக்கை செய்து வருகின்றனர். எனவே கிராமங்களில் எங்களின் நலன்கருதி உலர்களம் அமைத்து தரவேண்டும்’ என்றார். இதற்கு பதில் அளித்த வேளாண்மை உதவி அலுவலர் இதுகுறித்து அதிகாரிகளிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். விவசாயிகள் பிளாஸ்டிக் பொருள்களை தவிர்க்க வேண்டும், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் பாதுகாக்க வேண்டும் என மண்டல துணை தாசில்தார் அழகர்சாமி தெரிவித்தார்.

Tags :
× RELATED ஒரு ஓட்டு கூட போடாத இரண்டு கிராமமக்கள்