பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ஏராளமானோர் பங்கேற்பு

பழநி, டிச. 12: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் நடந்த வருடாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். பழநி கிழக்கு ரதவீதியில் பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டில் உள்ள. இக்கோயிலில் கடந்த வருடம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேக தினமான நேற்று இங்கு வருடாபிஷேகம் நடந்தது. முன்னதாக கோயில் வளாகத்தில் புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் வைத்து சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கோயிலின் உட்பிரகாரத்தில் யாகபூஜையில் வைக்கப்பட்ட கலசங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனை, பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மாலை பிரியநாயகி, பெரியநாயகி சமேத கைலாசநாதருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. பின்னர் 16 வகை அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரங்களும் நடந்தன. இதன்பின், மாங்கல்யம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்களுக்கு குங்குமம், மஞ்சள்கயிறு, வளையல் போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டது.  இதில் பழநி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், உபயதாரர் கண்பத் கிராண்ட ஹரிஹரமுத்து, செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: