அணையில் மீன்பிடிக்கும் உரிமம் ரத்து மீன்களை தரையில் கொட்டி ஏலதாரர்கள் போராட்டம்

பழநி, டிச. 12:  அணையில் மீன்பிடிக்கும் உரிமம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து பழநி அருகே ஏலதாரர்கள் மீன்களை தரையில் கொட்டி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பழநி அருகே பாலசமுத்திரத்தில் பாலாறு- பொருந்தலாறு அணை உள்ளது. 65 அடி உயரத்தில் 1524 மில்லியன் கனஅடி தண்ணீர் கொள்ளளவு கொண்டது. தற்போது அணையில் 63 அடி அளவிற்கு நீர் உள்ளது. இந்த அணையில் மீன்வளத்துறை சார்பில் மீன்கள் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மீன் விற்பனை உரிமம் தனியாருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு 3:1 என்ற விகிதத்தில் பங்குத்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று மீன்பிடித்து வந்த மீனவர்களிடம் மீன்வளத்துறை அதிகாரிகள் மீன்களை வாங்க மறுத்துள்ளனர். இதனால் மீனவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மீனவர்கள் பிடித்து வந்த மீன்களை தரையில் கொட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு சப்கலெக்டர் அருண்ராஜ், தாலுகா போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சென்றனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் மீனவர்கள் சிலர் முறைகேடாக 1 மாதத்திற்கு மேலாக அணைகளில் வலைகளை எடுக்காமல் விடுவதும், பின், அதில் உள்ள மீன்களை விதிமுறைகளுக்கு முரணாக விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்தது. இதனடிப்படையில் சப்கலெக்டர், மீனவர் சங்க நிர்வாகிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யவும், 1 வார காலத்திற்கு பாலாறு அணைப்பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையை ரத்து செய்தும் உத்தரவிட்டார்.

Related Stories: