கட்டிய 7 ஆண்டுகளிலே ‘பெயர்ந்து விழும்’ பெரும்பாறை சுகாதார நிலையம் அச்சத்துடன் சிகிச்சை பெறும் நோயாளிகள் மராமத்து பார்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

பட்டிவீரன்பட்டி, டிச. 12:  கட்டிய 7 ஆண்டுகளிலே பெரும்பாறை அரசு சுகாதார நிலைய கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழுகின்றன. இதனால் நோயாளிகள் அச்சத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தாண்டிக்குடி ரோட்டில் உள்ளது. தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சார்பில் 2011ம் ஆண்டு ரூ.21.92 லட்சம் செலவில் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த சுகாதார நிலையத்தில் 5 படுக்கைகள் உள்ளன.  1 மருத்துவர், 2 செவிலியர்கள் பணியில் உள்ளனர். இங்கு பெரும்பாறை, கேசி பட்டி, கொங்கபட்டி, கவியக்காடு, நல்லூர்காடு, காமனூர், கல்லாங்கிணறு, தாண்டிக்குடி, கானல்காடு, குப்பம்மாள்பட்டி, மஞ்சள்பரப்பு, குத்துக்காடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மலைக்கிராம மக்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வருகின்றனர். இம்மருத்துவமனை கட்டப்பட்டு 7 ஆண்டுகள்தான் ஆகிறது. அதற்குள் நோயாளிகள் காத்திருப்பு அறை கட்டிடத்தின் மேற்கூரையில் மழைநீர் கசிந்து சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. மேலும் படுக்கைகள் உள்ள அறையில் சுவர் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் நோயாளிகள் அச்சத்துடனே சிகிச்சை பெற வருகின்றனர். தவிர, இங்கு பிரசவம் செய்து கொள்ளும் பெண்கள் பச்சிளம் குழந்தைகளுடன் எப்போது வீட்டிற்கு செல்வோம் என அச்ச உணர்வுடன் தங்கி வருகின்றனர். மேலும் மழைநீர் கசிவால் நோயாளிகளுக்கு வழங்க வைத்திருக்கும் மாத்திரைகள் தண்ணீர் பட்டு வீணாகிறது.

இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘‘மருத்துவமனை கட்டி 7 ஆண்டுகள்தான் ஆகிறது. ஆனால் அதற்குள் கட்டிடததின் பல இடங்களில் மழைநீர் கசிவு, விரிசல் ஏற்பட்டு நோயாளிகளை அச்சுறுத்தி வருகிறது. இதனால் பலர் தங்கி சிகிச்சை பெறுவதற்காக திண்டுக்கல், வத்தலக்குண்டு போன்ற ஊர்களுக்கு சென்று விடுகின்றனர். எனவே கட்டிடத்தை உடனே மராமத்து பணிகள் மேற்கொள்வதுடன் தொடர்ந்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

அவசர கேஸா...  அடுத்த ஊருக்கு போங்க

இப்பகுதி மக்கள் கூறுகையில்,  ‘‘பெரும்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பகுதி நேரமாகத்தான் மருத்துவ அலுவலர் வந்து செல்கின்றனர். இதனால் மலைக்கிராமங்களில் இருந்து அவசர சிகிச்சைக்கு வருபவர்கள் திண்டுக்கல், வத்தலக்குண்டு போன்ற ஊர்களுக்கே அழைத்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் நேர விரயம் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகம் நடக்கின்றன. எனவே இதனை தவிர்க்க ஷிப்டு முறையில் மருத்துவர் தங்கி பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். 

Related Stories: