ஏஜென்டுகளுக்கு எதிர்ப்பு சுங்கச்சாவடியை முற்றுைகயிட்ட சுற்றுலா வழிகாட்டிகள் கொடைக்கானலில் பரபரப்பு

கொடைக்கானல், டிச. 12:  சுற்றுலா பயணிகளை வழிமறிக்கும் ஏஜென்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொடைக்கானல் சுங்கச்சாவடியை சுற்றுலா வழிகாட்டிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கொடைக்கானலில்  சுற்றுலா வழிகாட்டிகள் சுமார் 250 பேர் உள்ளனர். இவர்கள் கொடைக்கானலுக்கு வரும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் அவரவர் தாய் மொழியிலே பேசி பல்வேறு இடங்களை சுற்றி காண்பிக்கும் பணியை செய்து வருகின்றனர்.  கடந்த சில ஆண்டுகளாக கொடைக்கானல் வழியில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி பகுதியில் தனியார் காட்டேஜ்கள், ஓட்டல்களை சேர்ந்த ஏஜென்ட்கள் சுற்றுலா பயணிகளை அங்கேயே மறித்து அழைத்து சென்று விடுவதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து சுற்றுலா வழிகாட்டிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த சுற்றுலா வழிகாட்டிகள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று வெள்ளி நீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி பகுதியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர். இங்குள்ள ஏஜென்ட்கள் சுற்றுலா பயணிகளை அணுகக்கூடாது, அடையாள அட்டைகள் இல்லாதமல் சுற்றுலா வழிகாட்டிகள் பணிகள் செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தகவலறிந்ததும் தாசில்தார் ரமேஷ், நகராட்சி அமைப்பு அலவலர் முருகானந்தம், கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். சுற்றுலா வழிகாட்டிகளில் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 3 மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: