வேட்பாளர் பட்டியல் கிழிப்பு அதிமுகவினரை கண்டித்து அமமுகவினர் மறியல் பழநியில் பரபரப்பு

பழநி, டிச. 12:  பழநி கூட்டுறவு விற்பனையாளர் சங்க தேர்தலில் அதிமுகவினர் வேட்பாளர் பட்டியலை கிழித்ததை கண்டித்து அமமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  பழநி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பெரும்பாலானவை தேர்தல் நடத்தப்பட்டு விட்டது. இங்கு அதிமுகவினர் தோல்வியடையும் சூழலில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் தேர்தலை நிறுத்த பல்வேறு தகராறுகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட 11 உறுப்பினர்கள் கொண்ட பழநி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்க  தேர்தல் தகராறின் காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது 2வது முறையாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 10ம் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. இதில் திமுக, அமமுக, அதிமுக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர். நேற்று வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. மொத்தம் 62 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர் பிரஷ்ஷேவ் அலுவலக வளாகத்தில் ஒட்டினார். சிறிதுநேரத்தில் இப்பட்டியலை அதிமுகவை சேர்ந்த வார்டு பிரதிநிதி செல்வக்குமார் என்பவர் கிழித்து சென்றதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமமுகவினர் நகரச் செயலாளர் கணேசன் தலைமையில் பழநி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்ததும் பழநி தாலுகா இன்ஸ்பெக்டர் பொன்னிவளவன் தலைமையிலான போலீசார் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வேட்பாளர் பட்டியலை மீண்டும் ஒட்ட வேண்டும். கிழித்து சென்றவர்கள் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். மீண்டும் அலுவலக வளாகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பாளர்களின் பட்டியல் நகல் ஒட்டப்பட்டதை தொடர்ந்து அமமுகவினர் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: