ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு குழந்தையின் சடலத்துடன் வந்தவர் கைது

ஈரோடு, டிச. 12: இறந்த குழந்தையின் சடலத்துடன் ஈரோடு கலெக்டர் முகாம் அலுவலகத்திற்கு வந்தவரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு நாட்ராயன் கோவில் பகுதியில் ரோட்டோர பகுதியை சேர்ந்தவர் ராம் (45). இவருக்கு நான்கு மகள் உள்ளனர். இதில் 3 மகள் ஈரோடு முள்ளாம்பரப்பில் உள்ள காப்பகத்தில் தங்கி படித்து வருகின்றனர். இதில் நான்காவது மகளான வெள்ளியம்மாள் (3) நாமக்கல் மாவட்டத்தில் மொளசி பகுதியில் உள்ள காப்பகத்தில் சேர்த்துள்ளனர். வெள்ளியம்மாளுக்கு நேற்று முன்தினம் உடல் நலம் பாதிக்கப்பட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வெள்ளியம்மாள் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து திருச்செங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து, வெள்ளியம்மாளின் உடலை பிரேத பரிசோதனை செய்து, அவரது பெற்றோரிடம் உடலை ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து ஈரோட்டிற்கு உடலை தகனம் செய்வதற்காக ஆம்புலன்சில் எடுத்து வந்தனர்.

ஆனால் வெள்ளியம்மாளின் இறப்பில் சந்தேகம் இருப்பதால் நேரடியாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் முறையிடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஈரோடு காவிரிக்கரை, கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதையறிந்த அவர்கள் இறந்த குழந்தையின் உடலை வழியிலேயே ஆம்புலன்சில் இருந்து இறக்கி பைக்கில் ஈரோடு கலெக்டர் முகாம் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதை பார்த்த வீரப்பன் சத்திரம் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் ஈரோடு காசிபாளையம் காந்திஜி வீதியை சேர்ந்த புரட்சி பாரத அமைப்பின் மாவட்ட செயலாளர் பிரேம்நாத் (37) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்தனர். உடலை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: