கோபி அருகே அரசு கல்லுாரியில் தொடர் கொள்ளை

கோபி, டிச. 12:  கோபி அருகே நம்பியூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 4 நாட்களில் 2வது முறையாக கொள்ளை நடந்துள்ளது. இந்த குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள நம்பியூரில் கடந்த ஆண்டு புதிதாக அரசு கலைக்கல்லூரி துவங்கப்பட்டது. இக்கல்லூரிக்கு திட்டமலை அருகே புதிய கட்டிடம் கட்டப்படுவதால் தற்காலிகமாக புதுசூரிபாளையம் அருகே உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கோபி, நம்பியூர், அவினாசி, கெட்டிசெவியூர், குன்னத்தூர், சாவக்காட்டுப்பாளையம், சேவூர், புளியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 350 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

கடந்த 6ம் தேதி இரவு கல்லூரியில் உள்ள மூன்று அறைகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள், சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான 2 கம்ப்யூட்டர்கள், வீடியோ புரொஜெக்டர் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் கல்லூரியின் பின்பக்கம் உள்ள கம்பிவேலியை அகற்றி உள்ளே சென்ற கொள்ளையர்கள், கல்லூரி கணினி அறையின் பூட்டை உடைத்து அங்கிருந்த சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான 9 கம்ப்யூட்டர்களை திருடிசென்றுள்ளனர். நேற்று காலை கல்லூரிக்கு வந்த கல்லூரி முதல்வர் தமிழ்மணி,  இது குறித்து நம்பியூர் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில், போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட நான்கே நாளில் காவல்துறைக்கு சவால் விடும் வகையில் மீண்டும் அதே கல்லூரியில் கொள்ளையர்கள் மீண்டும் கைவரிசையை காட்டியுள்ளனர். ஆனால் இதுவரை கொள்ளையர்கள் குறித்து எவ்வித தடயமும் கிடைக்காமல் நம்பியூர் போலீசார் திணறி வருகின்றனர்.

Related Stories: