ஈரோடு பஸ் ஸ்டாண்டில் எம்.எல்.ஏ.,தென்னரசு ஆய்வு

ஈரோடு, டிச. 12:  ஈரோடு பஸ் ஸ்டாண்ட் பகுதியில் குண்டும், குழியுமான ரோட்டால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பகுதிகளில் உள்ள ரோட்டை நேற்று எம்.எல்.ஏ.தென்னரசு திடீர் ஆய்வு செய்தார். ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம், ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் மற்றும் பாதாள மின்கேபிள் பதிக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டப்பணிகளுக்காக மாநகராட்சி பகுதி முழுவதும் ரோடுகளை ஆங்காங்கே தோண்டி போட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மாநகரின் முக்கிய பகுதியான பஸ் ஸ்டாண்டை ஒட்டியுள்ள நாச்சியப்பா வீதி, அகில்மேடு வீதி ஆகிய வீதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த பணிகளுக்காக ரோடுகளை தோண்டி போட்டுள்ளனர். இதனால் பஸ்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில் பணிகள் முடிக்கப்பட்ட பகுதியில் ரோடு போடுவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இதனை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலமுறை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தனர். இந்நிலையில் நேற்று ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.தென்னரசு நாச்சியப்பா வீதியில் ரோட்டை ஆய்வு செய்ய வந்தார்.  அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எம்.எல்.ஏ.,விடம் கூறியதாவது: பாதாள சாக்கடை முடித்து ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்திற்காக ரோடுகளை தோண்டினர். அந்த பணி முடித்த நிலையில் பாதாள கேபிள் பதிக்க மீண்டும் ரோட்டை தோண்டி பணிகளை முடித்து விட்டனர். ஆனால் 2 மாதமாகியும் இதுவரை ரோட்டை சீரமைக்கவில்லை. இதனால் நாங்கள் அவதிப்பட்டு  வருகிறோம். எனவே ரோட்டை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து எம்.எல்.ஏ.தென்னரசு அங்கிருந்த 2வது மண்டல உதவி ஆணையர் சண்முகவடிவிடம் தார்சாலை போட உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.  மேலும் அப்பகுதியில் தார்சாலை அமைக்க ரூ.3.10 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளதாகவும், இதற்கான பணிகள் நாளை (இன்று) துவங்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள நாச்சியப்பா வீதி, அகில்மேடு 1வது முதல் 5வது வீதி வரை, வாசுவி வீதி, கண்ணகி வீதி, பாரதி வீதி, தெப்பக்குளம் வீதி ஆகிய பகுதிகளில் குண்டும், குழியுமான ரோடுகள் அனைத்தும் தார்சாலைகளாக மாற்றப்பட உள்ளது. அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக தார்சாலை அமைக்கப்படும். அதுவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றனர்.

Related Stories: