சத்தியமங்கலம் அருகே அபாய நிலையில் அங்கன்வாடி கட்டிடம்

சத்தியமங்கலம், டிச. 12:  சத்தியமங்கலம் அடுத்த கெத்தேசால் மலைகிராமத்தில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளதால், குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது என கிரமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கெத்தேசால் மலைகிராமத்தில் 200க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. படிப்பறிவில்லாத இக்கிராம மக்கள் மானவாரியாக ராகி, மக்காசோளம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடுவதும், வனப்பகுதியில் உள்ள சீமார்புல், தேன், கடுக்காய் சேகரித்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு பிழைப்பு நடத்தி வருகின்றனர். இக்கிராமத்தில் கடந்த 30 ஆண்டுக்கு முன்பு அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், கான்கிரீட் கூரை பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.   

மேலும் கதவு, ஜன்னல் பழுதடைந்து விட்டதால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அங்கன்வாடி மைத்திற்குள்ளே புகுந்து விடுகின்றன. எந்நேரமும் இடிந்து விழக்கூடிய அபாய நிலையில் இக்கட்டிடம் உள்ளது. இந்த அபாயகரமான கட்டிடத்தில் தான் 20 குழந்தைகளும் தினமும் சென்று வருகின்றனர். மழைக்காலங்களில் தரை முழுவதும் ஈரமாக இருக்கும். அப்போது குழந்தைகள் அங்கன்வாடி மையத்திற்கு செல்லமாட்டார்கள். இக்கிராம மக்கள் புதிய கட்டிடம் கட்டித்தரவேண்டும் என தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர்.   எனவே அதிகாரிகள் அங்கன்வாடி மைய கட்டிடத்தை ஆய்வு செய்து புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: