ரூ.237 கோடியில் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டப்பணி

பெருந்துறை, டிச. 12:  ஈரோடு மாவட்டம்  பெருந்துறையில் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை இன்று (12ம் தேதி)  அமைச்சர் எஸ்.பி., வேலுமணி துவங்கிவைக்கிறார். இதுகுறித்து பெருந்துறை எம்.எல்ஏ., தோப்பு வெங்கடாச்சலம் நிருபர்களிடம் கூறியதாவது:  ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பெருந்துறை மற்றும் 7 பேரூராட்சி 547 வழியோர கிராமங்களுக்காக கொடிவேரி அணையை ஆதாரமாக கொண்ட கூட்டு குடிநீர் திட்டம் ரூ.237 கோடி செலவில் துவங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை பெருந்துறையில் அமைச்சர் எஸ்.பி.,வேலுமணி இன்று துவக்கி வைக்கிறார். கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்ட நிலையில் இதற்கான பணிகள் இன்று துவங்குகிறது. தற்போது ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 28 கிராம ஊராட்சி, பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், காஞ்சிக்கோயில், நல்லாம்பட்டி,  பள்ளபாளையம் மற்றும் பெத்தாம்பாளையம் பேரூராட்சி தவிர சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நான்கு கிராம ஊராட்சிகளும், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 37 ஊராட்சிகள் மற்றும் ஊத்துக்குளி, குன்னத்தூர் பேரூராட்சிகள் இந்த கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளது.

மேலும் இந்த திட்டம் 2050ம் ஆண்டு மக்கள் தொகையை கருத்தில் கொண்டு  வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கொடிவேரி கதவணைக்கு மேலே பவானி ஆற்றின் கரையில் நீரேற்றும் நிலையத்துடன் கூடிய கிணறு அமைக்கப்பட உள்ளது. இந்த கிணற்றிலிருந்து 56 கி.மீ., பிரதான குழாய் அமைக்கப்பட்டு திங்களூர் அருகே 2 கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை குழாய் மூலம் பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் உள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றின் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படும். ஏற்கனவே உள்ள மேல்நிலை தொட்டிகள் தவிர புதிதாக 71 மேல்நிலை தொட்டிஅமைக்கப்பட உள்ளது. இவ்வாறு எம்.எல்ஏ., தோப்பு வெங்கடாச்சலம் கூறினார்.

Related Stories: