வங்கி மேலாளர் போல் பேசி பொதுமக்களிடம் மோசடி: ரூ.11.25 லட்சம் மீட்பு

ஈரோடு, டிச. 12:  ஈரோடு மாவட்ட எஸ்.பி.,சக்திகணேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:  ஈரோடு மாவட்டத்தில் 40க்கும் மேற்பட்ட நபர்களிடம் வங்கி மேலாளர் பேசுவது போல பேசி ஏடிஎம்., விபரங்களை பெற்று சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.20 லட்சத்து 85 ஆயிரத்து 754 மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு ரூ.11 லட்சத்து 25 ஆயிரத்து 647 திரும்ப பெறப்பட்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு புதிய எண்களில் இருந்து போன் செய்து வங்கி மேலாளர், ரிசர்வ் வங்கி மேலாளர் பேசுவதாக கூறி ஏடிஎம் கார்டு எண், செல்போனுக்கு வந்த ஒடிபி எண்ணை கேட்டாலோ அல்லது தங்களுக்கு பரிசு விழுந்திருப்பதாக சொன்னாலோ, இ-மெயில், வாட்ஸ்அப், பேஸ்புக் ஆகியவற்றின் மூலமாக அறிமுகமாகி ஆன்-லைன் மூலமாக வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறினாலோ, பரிசு பொருள் அனுப்புவதாக கூறினாலோ ஏமாற வேண்டாம். ஏடிஎம்., விபரம் கொடுத்து ஏமாந்தால் 24 மணி நேரத்தில் புகார் அளிக்க வேண்டும். கடந்த 2 மாதத்தில் ஏடிஎம் கார்டு விபரங்களை கூறி பணத்தை இழந்தவர்களுக்கு சைபர் கிரைம் மூலமாக விசாரிக்கப்பட்டு ரூ.ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 157  மீட்கப்பட்டுள்ளது.

இதேபோல தொலைந்த செல்போன்களை ஐஎம்இஐ., எண்களை கொண்டு 17 செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. பல்வேறு குற்ற வழக்குகளிலும் ஐஎம்இஐ., எண்களை

கொண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அறிமுகம் இல்லாத நபர்கள் உங்களது செல்போன் எண்ணிற்கு பேசினால் எந்த விபரங்களையும் தெரிவிக்க கூடாது. பணம் கொடுத்தால் வேலை வாங்கி தருவதாக கூறினால் அதன் உண்மை தன்மையை அறியாமல் பணத்தை கட்டி ஏமாற வேண்டாம். உங்கள் செல்போனுக்கு காரோ, லட்சக்கணக்கில் பரிசுதொகை விழுந்திருப்பதாக கூறி பணம் செலுத்த வேண்டும் என கூறினால் வங்கி தகவல்களையும் தெரிவிக்க வேண்டாம். சமூக வலைதளங்களில் வரும் செய்தியின் உண்மை தன்மையை அறியாமல் அதை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம். சில பொய்யான தகவல்களை பகிர்வதன் மூலமாக பொதுமக்களுக்கு தேவையற்ற வதந்திகளை பரப்புவதற்கு நீங்கள் காரணமானால் சட்டப்பூர்வமான நடவடிக்கைக்கு ஆளாவீர்கள். குழந்தைகளுக்கு செல்போனை பயன்படுத்த கொடுக்க வேண்டாம். சமீப காலங்களில் பள்ளியில் படிக்கும் சிறுவர், சிறுமியர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக பாதிக்கப்பட்டு அதுதொடர்பான புகார்கள் அதிக அளவில் வருகிறது. படிப்பு தொடர்பாக இணையதளங்களை பயன்படுத்தும்போது பெற்றோர்கள் உடன் இருக்க வேண்டும். இவ்வாறு எஸ்.பி., கூறியுள்ளார்.

Related Stories: