சாலையில்விழுந்த 5 பவுன் நகை சிசிடிவி கேமிரா மூலம் மீட்பு

அந்தியூர், டிச. 12:  அந்தியூர் அடுத்த தவிட்டுப்பாளையம் அவினாசி வீதியை சேர்ந்தவர் சக்திவேல் (80), பருத்தி வியாபாரி. இவர் நேற்று முன்தினம் 5 பவுன் தங்க செயினை விற்பதற்காக தேர் வீதியில் உள்ள ஒரு கடைக்கு சென்றுள்ளார். செல்லும் வழியில் போனை எடுத்துப் பேசும்போது அவர் பாக்கெட்டில் வைத்திருந்த தங்கச்செயின் தவறி கீழே விழுந்துள்ளது. இதை அறியாமல் கடைக்கு சென்ற சக்திவேல்  செயினை எடுக்க முயன்ற போது, தங்கச் செயின் தவறியது தெரியவந்ததுள்ளது. இதையடுத்து செல்போன் எடுத்த இடத்தில் விழுந்திருக்கலாம் என்று அங்கு சென்று பார்த்த போது அங்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து சக்திவேல்  அந்தியூர் இன்ஸ்பெக்டர் ரவியிடம் அளித்த புகாரின் பேரில், போலீசார் சம்பவயிடத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி., கேமரா பதிவுகளை பார்வையிட்டனர்.   

அதில் ஒரு பெண் அந்த பகுதியில் கிடந்த செயினை எடுத்துச் செல்வது தெரியவந்தது. உடனடியாக அந்தப் பெண் பற்றி செல்போன் மூலம் மற்றவர்களுக்கு தகவல் அளித்தனர். இதில் அந்தப் பெண் அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் கடையில் வேலை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அங்கு சென்று அந்த பெண்ணிடம் விசாரித்து தங்க செயினை மீட்டு சக்திவேலிடம் ஒப்படைத்தனர். இதனால் மகிழ்ச்சியடைந்த சக்திவேல் அந்தியூர் போலீசாருக்கு உதவியாக மேலும் மூன்று இடங்களில் சி.சி.டி.வி கேமராவை தனது செலவில் பொருத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

Related Stories: