இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

கோபி,  டிச. 12: விபத்தில் பலியான வாலிபரின் குடும்பத்திற்கு இழப்பீடு  வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது. கோவை பெரியநாய்க்கன்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மணிகண்டன் (26).  தனியார் மருத்துவமனை ஊழியர். இவர் கடந்த 4.1.2009ம் தேதி ஆம்புலன்ஸ்  வாகனத்தில் சென்றபோது, கோவை - திருச்சி சாலையில் காளிவேலாம்பட்டி பிரிவு  அருகே எதிரே வந்த அரசு பஸ் மோதியதில் மணிகண்டன் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தார். இந்த வழக்கு கோபியில் உள்ள விரைவு  நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கடந்த  21.12.2011 அன்று மணிகண்டனின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சத்து 89 ஆயிரம்  இழப்பீடு வழங்க போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் மணிகண்டனின்  குடும்பத்தார் இழப்பீடு குறைவாக உள்ளது என சென்னை உயர் நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்தனர். அதைத்தொடர்ந்து மணிகண்டனின் குடும்பத்திற்கு  சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 5.2.2018 அன்று ரூ.10 லட்சத்து 18 ஆயிரத்து  200 மற்றும் 7.5 சதவீத வட்டியுடன்

வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

அதன் பின்னரும் போக்குவரத்துக்கழகத்தினர் இழப்பீடு வழங்காத நிலையில்,  கோபியில் உள்ள மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 12.11.2018  அன்று நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மணி அரசு  பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, நேற்று கோபி பஸ்  நிலையத்தில் இருந்த அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்து  நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் அரசு போக்குவரத்துக்கழகத்தினர்,  இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்குவதாகவும், அதற்குண்டான தொகை நிரப்பப்பட்ட  காசோலையை வாட்ஸ் அப்பில் தலைமை அலுவலகம் அனுப்பியுள்ளதாக நீதிமன்றத்தில்  ஆவணங்களை சமர்ப்பித்தனர். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பறிமுதல் செய்யப்பட்ட  பஸ்சை விடுவித்தார்.

Related Stories: