கவர்னர் கிரண்பேடி பேச்சு மதுப்பழக்கம் உள்ள தந்தையை மாணவர்களால் திருத்த முடியும்

திருக்கனூர், டிச. 12:

தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பரிசு மற்றும் அரசு பள்ளிக்கு கணினி வழங்கும் விழா மண்ணாடிப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. டிபிஆர் செல்வம் எம்எல்ஏ தலைமை தாங்கினார். தலைமையாசிரியர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.  சிறப்பு விருந்தினராக கவர்னர் கிரண்பேடி கலந்து கொண்டு, கம்ப்யூட்டர் மற்றும் கல்வி உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு பரிசு வழங்கும் விழா, முதலில் புதுச்சேரியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவுக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அப்போது ஓட்டலில் உணவுக்கு ஆகும் செலவில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்யலாமே என அவர்களிடம் கேட்டுக்கொண்டேன். அவர்களும் இதனையேற்று கணினி, ஜாமின்ட்ரி பாக்ஸ், குடை உள்ளிட்ட பொருட்களை வாங்கிக்கொடுத்துள்ளனர். நாம் உண்ணும் உணவை மூன்று மணி நேரத்துக்குள்ளாக மறந்துவிடுவோம், ஆனால் இது போன்ற கல்விக்கு செய்யும் செலவை, இங்கிருக்கும் மாணவர்கள் தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாததாக இருக்கும்.

இங்குள்ள எம்எல்ஏ மிகச்சிறப்பாக செயல்படுகிறார்,  எனக்கு அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்குவதோடு, தேவையானவற்றை கேட்டுப்பெறுகிறார். இதன்காரணமாகவே இந்த பள்ளியில் விழா நடத்துவதற்கு தேர்வு செய்தேன். மாணவர்களால்தான் மதுப்பழக்கத்தில் உள்ள தந்தையை திருத்த முடியும். தினமும் மதுக்காக செலவு செய்யும் பணத்தில் புத்தகம், விளையாட்டு பொருட்கள் வாங்கித்தர வலியுறுத்துங்கள். உங்களையெல்லாம் பார்க்கும் போது, என்னுடைய சிறுவயது நினைவுகள் வருவதை தவிர்க்க முடியவில்லை. நான் இதுவரை மூன்று முறை மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு வந்துள்ளேன். அப்போது இப்பள்ளியை சேர்ந்த 3 மாணவர்கள், என்னை சந்தித்து, பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால், பாம்புகள் உள்ளே வருவதாக கவலை தெரிவித்தனர். உடனடியாக சுற்றுச்சுவரும் கட்டிக்கொடுக்கப்பட்டது. தனக்காக எதுவும் கேட்காமல், தங்கள் படிக்கும் பள்ளிக்கு தேவையான உதவியை செய்யுமாறு கூறிய 3 மாணவர்களும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.  இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: