ஆக்கிரமிப்பை அகற்றுவதில் வாக்குவாதம் கிருமாம்பாக்கத்தில் காங்கிரஸ், என்ஆர் காங். மீண்டும் மோதல்

பாகூர், டிச. 12:  கிருமாம்பாக்கத்தில் காங்கிரஸ், என்ஆர் காங்கிரஸ் இடையே மீண்டும் மோதல் சூழல் உருவாகி உள்ளதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.புதுவை கிருமாம்பாக்கத்தில் அம்பேத்கர் சிலை அமைக்கும் பணி விவகாரத்தில் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் அமைச்சர் ராஜவேலு தரப்பினர் இடையே மாறுபட்ட கருத்து நிலவி வருகிறது.இந்த நிலையில் கிருமாம்பாக்கத்தில் நுழைவு வாயிலுடன் கூடிய அம்பேத்கர் சிலை வைப்பதற்காக நேற்று காலை ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ரகுநாதன், பாட்கோ செயற்பொறியாளர் ஏகாம்பரம், தாசில்தார் கார்த்திகேயன் ஆகியோர் நிலம் அளவீடு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேசன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.அப்போது, மந்தைவெளி அருகில் ஒரு இடத்தில் ஆக்கிரமிப்பு இருந்தது. தகவல் அறிந்ததும் அமைச்சர் கந்தசாமி அங்கு விரைந்து வந்து, ஆக்கிரமிப்ளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். உடனே ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜவேலு, உத்தரவேலு மகன் லட்சுமிகாந்தன் ஆகியோர் அங்கு விரைந்து வந்து அதிகாரிகள், போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றவதற்கு முன்னதாக நோட்டீஸ் கொடுத்தீர்களா என கேட்டு தகராறு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இத்தகவல் கிடைத்து அமைச்சர் கந்தசாமி மற்றும் ராஜவேலுவின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.இதனை தொடர்ந்து மேலும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பதற்றம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: