×

நெல்லித்தோப்பு மீன் மார்க்கெட்டில் முதல்வர் நாராயணசாமி ஆய்வு

புதுச்சேரி, டிச. 12: நெல்லித்தோப்பு மீன் மார்க்கெட்டில் முதல்வர் நாராயணசாமி நேற்று ஆய்வு நடத்தி, வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.புதுச்சேரி நெல்லித்தோப்பு மீன் மார்க்கெட்டில் 100க்கும் மேற்பட்டோர் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள், மீன் மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி தொகுதி எம்எல்ஏவும், முதல்வருமான நாராயணசாமியிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து முதல்வர் நாராயணசாமி நேற்று காலை நெல்லித்ேதாப்பு மீன் மார்க்கெட்டுக்கு நகராட்சி அதிகாரிகளுடன் சென்று அதிரடி ஆய்வு ேமற்கொண்டார். மேலும் மீன் விற்கும் பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது அவர்கள் முதல்வரிடம் கூறுகையில், இங்கு கடை போட புதுச்சேரி நகராட்சிக்கு அடிகாசாக தினமும் ரூ.5 செலுத்துகிறோம். மீன் மார்க்கெட்டுக்கு கேட், வாட்ச்மேன் இல்லாததால் அடிக்கடி மீன்கள் திருட்டு போகிறது. மேலும் கழிவறையில் இருந்த தண்ணீர் தொட்டிக்கு ஏற்றும் மின்மோட்டார் திருட்டுபோய் பல ஆண்டுகள் ஆகிறது. எனவே மீன் மார்க்கெட்டுக்கு கேட், வாட்ச்மேன் நியமிக்க வேண்டும். டேங்குக்கு தண்ணீர் ஏற்ற மின்மோட்டார் வாங்கித்தர வேண்டும். வாய்க்கால் சிலாப்புகள் பெயர்ந்துள்ளதால், கொசுக்கள் அதிகமாக உள்ளது. ஆகவே புதிய சிலாப்புகள் போட்டு வாய்க்காலை மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். குறைகளை கேட்ட முதல்வர் நாராயணசாமி விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார். பின்னர் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையொட்டி மீன் விற்கும் பெண்களுக்கு முதல்வர் இனிப்பு வழங்கினார். பதிலுக்கு அந்த பெண்களும், முதல்வருக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆய்வின் போது புதுச்சேரி நகராட்சி ஆணையர் ஆதர்ஷ், செயற்பொறியாளர் சேகரன், இளநிலை பொறியாளர் வெங்கடாசலம் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Narayanasamy ,Nileside Fish Market ,
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை