×

தனியார் படகு குழாமிற்கு அனுமதி கொடுத்தால் வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன்

புதுச்சேரி,  டிச. 12:  நோணாங்குப்பம் அருகே தனியார் படகு குழாமிற்கு அரசு அனுமதியளித்தால், வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று காங்கிரஸ் எம்எல்ஏ எம்என்ஆர் பாலன் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளார். புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் சார்பில் நோணாங்குப்பம் மற்றும் ஊசுட்டேரியில் படகு குழாம், கடற்கரையில் சீகல்ஸ் உணவகம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் உணவகம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நோணாங்குப்பம் படகு குழாம் மட்டுமே தற்போதைக்கு லாபத்தில் இயங்கி வருகிறது. படகு குழாமில் இருந்து இயக்கப்பட்டு வரும் படகில் ஏறி பாரடைஸ் தீவுக்கு சென்று வருவதில் சுற்றுலாப்பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்காரணமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிமாநில சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக சுற்றுலாவில் தனியார் பங்களிப்பை அதிகப்படுத்த அரசு முடிவு செய்தது.அதன்படி நோணாங்குப்பம் படகு குழாமிற்கு மிக அருகில் உள்ள இடையார்பாளையம் கழிமுக பகுதியில் தனியார் படகு குழாம் அமைக்க அரசு அனுமதியளித்துள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் இருக்கிறது.

இதற்கிடையே அரசின் இந்த முடிவை கண்டித்து சுற்றுலா வளர்ச்சிக்கழக ஊழியர்கள் பல்வேறு கட்ட  போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.இதனிடையே முதல்கட்ட அனுமதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும், ஊழியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது. ஆனால் தனியார் படகு குழாம் வேலைகள் நிறுத்தப்படவில்லை. இதற்கிடையே ஊழியர்களுக்கு ஆதரவாக சுற்றுலா  வளர்ச்சி கழக சேர்மனும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான எம்.என்.ஆர்.  பாலன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்  மல்லாடி  கிருஷ்ணாராவ் ஆகியோரை சேர்மன் பாலன் சந்தித்து பேசினார். அப்போது படகு குழாமிற்கு அனுமதியளித்தால், சுற்றுலா வளர்ச்சி கழகம் கடுமையாக பாதிக்கப்படும். இதற்கு அனுமதியளிக்கக்கூடாது என வலியுறுத்தினார்.  

இது குறித்து அவர் கூறுகையில், சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் பல்வேறு நிர்வாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டதால் தற்போது லாபகரமாக இயங்கும் நிறுவனமாக படிப்படியாக மாறி வருகிறது. அதே நேரத்தில் சீகல்ஸ் உணவகம் நஷ்டத்தில் இயங்கி வந்தாலும், அந்த ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்கிறோம். சம்பளத்துக்கு மட்டும் ரூ. 90 லட்சம் செலவாகிறது. அதோடு படகு சீரமைப்பு, டீசல் மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகமாகிறது. இதையெல்லாம் சமாளிக்க படகு குழாமின் வருமானம்தான் கைகொடுக்கிறது. அரசின் படகு குழாமிற்கு அருகிலேயே தனியார் படகு குழாம் நடத்த அனுமதியளித்தால், வருமானம் பாதியாக குறைந்துவிடும். இதனால் வாரியத்தை இழுத்து மூட வேண்டிய நிலை தான் ஏற்படும். என்னைப்பொறுத்தவரை அரசு வேறு எங்காவது தனியாருக்கு அனுமதி கொடுக்கட்டும், ஆனால் இங்கு மட்டும் அனுமதியளிக்கக்கூடாது என முதல்வரிடமும், அமைச்சரிடமும் நேரடியாக தெரிவித்துவிட்டேன். இதனையும் மீறி அனுமதியளித்தால், வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்வதை தவிர வேறு வழியில்லை என்றார்.
இந்த விவகாரம் புதுவை அரசு வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Board ,
× RELATED பெரம்பலூரில் மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகளை அகற்றும் பணி