தந்தை மீது போலீசில் புகார் அளித்த மாணவி ஹனிபா தூய்மை இந்தியா திட்ட தூதுவராக நியமனம் கழிப்பறை கட்டும் பணி துவக்கம்

ஆம்பூர், டிச.12: கழிப்பறை கட்டித்தருவதாக காலம் கடத்தி வரும் தந்தை மீது நடவடிக்கை எடுங்கள் என கூறி போலீசில் புகார் அளித்த மாணவி ஆம்பூர் நகராட்சி தூய்மை இந்தியா திட்ட தூதுவராக நியமிக்கப்பட்டார். வேலூர் மாவட்டம் ஆம்பூர் நடராஜபுரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த இஹஸ்யானுல்லாஹ் என்பவரது மகள் ஹனிபா ஜாரா(7). இரண்டாம் வகுப்பு படித்து வரும் இந்த மாணவி நேற்று முன்தினம் தனது தந்தை வீட்டில் கழிப்பறை கட்டி தருவதாக கூறி காலம் கடத்துவதாகவும் அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் ஆம்பூர் டவுன் போலீசில் புகார் செய்தார்

இந்த வினோத சம்பவத்தை கண்ட போலீசார் உடனடியாக ஆம்பூர் நகராட்சி சுகாதார பிரிவினருக்கு தகவல் தெரிவித்து அழைத்துப் பேசினர். பின்னர், அந்த மாணவியிடம் கழிப்பறை கட்டி தருவதாக நகராட்சியினர் சமாதானம் கூறி அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் இதுகுறித்து கலெக்டர் உத்தரவின் பேரில் மாணவியின் வீட்டின் பின்புறம் ஆம்பூர் நகராட்சி சார்பாக தூய்மை இந்தியா கழிப்பறை கட்டும் திட்டத்தின் கீழ் ₹12 ஆயிரம் செலவில் கழிப்பறை கட்டும் பணி நேற்று துவங்கியது. மேலும், மாணவியின் செயலை பாராட்டி ஆம்பூர் நகராட்சியின் தூய்மை இந்தியா திட்ட தூதுவராக மாணவி ஹனிபா ஜாரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: