×

வில்லியனூர் அருகே இருகிராம சுடுகாடு பிரச்னை அமைச்சர் தலைமையில் பேச்சு

வில்லியனூர், டிச. 12:
வில்லியனூர் திருவள்ளுவர் நகர் பகுதிக்கு சொந்தமான இடுகாடு பெரியபேட் பகுதியில் உள்ளது. இந்த இடுகாட்டை பல ஆண்டுகளாக திருவள்ளுவர் நகர் பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், நாளடைவில் மக்கள்பெருக்கம் அதிகரித்ததால் இடுகாட்டை சுற்றிலும் மனைபிரிவுகள் போடப்பட்டு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தற்போது குடியிருப்புகளுக்கு மத்தியில் இடுகாடு உள்ளதால் பெரியபேட் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனால் இடுகாட்டில் சடலங்களை புதைக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அவ்வப்போது புதைக்க வரும் சடலங்களை வழிமறித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதுசம்பந்தமாக பெரியபேட் மக்கள், கலெக்டர் மற்றும் வட்டாச்சியர் அலுவலகம், கொம்யூன் பஞ்சாயத்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயத்திடம் கோரிக்கை வைத்தனர்.  இந்த நிலையில் இதுசம்பந்தமாக வில்லியனூர் சப்-கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் சப்-கலெக்டர் உதயகுமார், எஸ்பி ரங்கநாதன் முன்னிலையில் இருபகுதி மக்களுக்கிடையே சமரச பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதில் தாசில்தார் மேத்யூ பிரான்சிஸ், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் வேலய்யன் மற்றும் பெரியபேட், திருவள்ளுவர் நகர் பகுதி மக்கள் கலந்து கொண்டனர். இடுகாட்டை திருவள்ளுவர் நகர் பகுதி மக்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். அதற்கு முன் இடுகாட்டை சுற்றிலும் மதில் சுவர் அமைக்க வேண்டும் என்றும் பெரியபேட் பகுதி மக்களுக்கு தேவையென்றால் இந்த இடுகாட்டை அவர்களும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து முடிந்தது.

Tags : Speaker ,Douglas Devananda ,Villianur ,
× RELATED கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவது...