வேலூர் சிறையில் கைதி தற்கொலை முயற்சி எதிரொலி கைதிகளின் அறைகளில் சோதனை நடத்த முடிவு

வேலூர், டிச.12: வேலூர் சிறையில் கைதி மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்ததன் எதிரொலியாக கைதிகளின் அறைகளில் மறைத்து வைக்கபட்டிருக்கும் மாத்திரைகள் குறித்து சோதனை நடத்த முடிவு செய்யதுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மத்திய சிறையில் 600க்கும் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையை சேர்ந்த சின்னசாமி(49) வழிப்பறி வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 2012ம் ஆண்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த 9ம் தேதி இரவு 11 மணியளவில் சின்னசாமி அதிகளவில் மாத்திரைகளை சாப்பிட்டு மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கைதிகள் கூச்சலிட்டுள்ளனர். இதையடுத்து சிறைத்துறை அதிகாரிகள் சின்னசாமியை மீட்டு வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், சிறை மருத்துவமனையில் கைதிகளுக்கு வழங்கப்படும் மாத்திரைகளை சில கைதிகள் சேர்த்து மறைத்து வைத்திருப்பதாகவும் சிறைத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கைதிகளின் பட்டியலை வைத்து, அதிகளவில் மாத்திரை வாங்கி சென்ற கைதிகள் யார் என்ற பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவர்களது அறைகளில் சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: