காரைக்காலில் கஜா புயலில் சாய்ந்த மரங்கள் ஏலம் விடப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது

காரைக்கால், டிச. 12: தினகரன் செய்தி எதிரொலி காரணமாக காரைக்காலில் கஜா புயலில் சாய்ந்த மரங்கள், மாவட்ட கலெக்டர் கேசவன் தலைமையில் நேற்று ஏலம் விடப்பட்டு அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது.காரைக்காலில் கடந்த நவம்பர் 15ம் தேதி கஜா புயல் வீசியது. இந்த புயலில் காரைக்கால் பாரதியார் வீதி, காமராஜர் வீதி, நேரு வீதி உள்ளிட்ட நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் ஆயிரக்கணக்கான மரங்களும் 200க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன.

இவற்றில் சாலையோரம் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரங்களை மாவட்ட நிர்வாகமும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் அப்புறப்படுத்தினார். ஆனால் வெட்டப்பட்ட மரங்கள், மரங்களில் கழிவுகள், புயலில் சேதமான வீட்டு குப்பைகள் சாலையோரம் இன்னமும் குவிந்துகிடக்கிறது. 22 நாட்கள் ஆகியும் மாவட்ட நிர்வாகம் இந்த குப்பைகளை சுத்தம் செய்ய முன்வரவில்லை. இவற்றை உடனே சுத்தம் செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில் மாவட்ட கலெக்டர் கேசவன் நேற்று சம்பந்தப்பட்ட பகுதிகளில் சாலையோரம் கிடந்த மரங்களை ஆய்வு செய்து, மாவட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பொது ஏலம் நடத்தி அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அதன்படி, காரைக்காலின் முக்கியப்பகுதிகளில் உள்ள சாலையோரம் கிடந்த மரங்கள் பொது ஏலம் விடப்பட்டு அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது. இன்னும் ஓரிரு நாளில் அனைத்து மரங்களும் அப்புறப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், கஜா புயலுக்கு பிறகு சாலையோரம் சேர்ந்த குப்பைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: