சாலையோரம் கடை வைத்து வியாபாரம் விவசாயிகளுக்கு உழவர் சந்தையில் இடம்

உளுந்தூர்பேட்டை, டிச. 12: விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி விருத்தாசலம் ரோடு சந்திப்பு பகுதியில் உள்ள கடை வீதியில் தினந்தோறும் கிராமத்தில் இருந்து வரும் விவசாயிகள் தங்களது விளைபொருட்களான காய்கறிகள், கீரை வகைகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் அதிக விபத்து நடைபெறும் இடத்தில் இந்த கடைகளை வைத்து காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்ததால் இவர்களுக்கு பாதுகாப்பான மாற்று இடம் ஒதுக்கிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பான செய்தி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியானது. இதன் எதிரொலியாக உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் ஷாகுல்அமீது, சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், பேரூராட்சி முதுநிலை உதவியாளர் தங்கவேல், மேற்பார்வையாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சேலம் ரோடு சந்திப்பில் உள்ள உழவர் சந்தை வளாகத்தில் கடைகளை வைப்பதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.

இந்நிலையில் நேற்று உழவர் சந்தை கண்காணிப்பு வேளாண்மை அதிகாரிகள் அவர்களுக்கு போதிய ஏற்பாடுகளை செய்து கொடுத்து நேற்று முதல் அங்கு கடைகளை திறந்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்ததுடன், உழவர் சந்தையில் கடைகளை வைக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் பேருந்துகளில் இலவசமாக தங்களது விளை பொருட்களை எடுத்து வருவதற்கு வசதியாக உரிய அடையாள அட்டை வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள், விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories: