அடிப்படை வசதிகளை செய்து தராத அதிகாரிகளை கண்டித்து தர்ணா

விருத்தாசலம், டிச. 12: பெ.பொன்னேரி ஊராட்சி திடீர்குப்பத்தில் அடிப்படை வசதிகள் செய்து தராத வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புரட்சிகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம் அடுத்த நல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெ.பொன்னேரி ஊராட்சி திடீர்குப்பத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கடந்த 10 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். பல்வேறு போராட்டங்களின் அடிப்படையில் அப்பகுதி மக்களுக்கு உடனடியாக அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என  திட்டக்குடி தாசில்தார் சத்தியன் கடந்த மே மாதம் 8ம் தேதி நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு உத்தரவிட்டார்.இதையடுத்து நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலரை பலமுறை சந்தித்து திடீர்குப்பம் பகுதி மக்கள் மனு அளித்து வந்தனர். ஆனால் அதன் மீது வட்டார வளர்ச்சி அலுவலகம் எந்த  நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வந்துள்ளது.

மேலும் நல்லூர் ஊராட்சியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நல்லதண்ணீர் குளத்தை தனிநபர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். அதனால் இந்த குளத்தின் ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்களிடம் அளிக்க வேண்டும் என வேப்பூர் வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஆனால் இந்த இரண்டு உத்தரவுகளின் மீதும் நல்லூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனை கண்டித்தும், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தின் முன் தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட  செயலாளர் கோகுலகிறிஸ்டீபன் தலைமை தாங்கினார். திட்டக்குடி வட்ட பொருளாளர் பானுமதி, மாவட்டக்குழு உறுப்பினர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கோரிக்கைகளை மனுவாக அளிக்க பரிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து சார்ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அந்தோணிராஜிடம் மனு அளித்தனர்.

Related Stories: