காட்டுமன்னார்கோவில் அருகே ₹40.11 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட தார்சாலை 6 மாதத்தில் சேதமடைந்த அவலம்

காட்டுமன்னார்கோவில், டிச. 12: காட்டுமன்னார்கோவில் அடுத்த ஷண்டன் செல்லியம்மன் கோயில் சாலை, அப்பகுதி விவசாய நிலங்களுக்கு செல்வதற்கும், காட்டுமன்னார்கோவில் மற்றும் ஆயங்குடி போன்ற பகுதிகளுக்கு அத்தியாவசிய தேவைகளுக்காக அப்பகுதி மக்கள் சென்று வருவதற்கு பயன்படுத்தப்படும் முக்கிய சாலையாகவும் அமைந்துள்ளது. தொரப்பு ஊராட்சிக்குட்பட்ட இந்த சாலை தாய்-2 திட்டம் 2016-2017ன்படி ரூ.40.11 லட்சம் செலவில் சுமார் 2 கிலோ மீட்டர் வரை போடப்பட்டது. கடந்த ஜூலை மாதம் இறுதியில் சாலைப்பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. சாலை போடப்பட்டு 6 மாதங்களுக்குள்ளாகவே இந்த சாலை மழையால் சேதமடைந்து இருபுறமும் கரைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறிவிட்டது. அவசர காலத்தில் இச்சாலை வழியாக செல்பவர்கள் மிகுந்த அச்சத்தில் செல்ல வேண்டியுள்ளது. சற்று கவனம் தவறினாலும் ஆங்காங்கே சாலையில் பெயர்ந்து கிடக்கும் கற்களில் சறுக்கி சுமார் 20 அடி ஆழமுள்ள வடிகால் வாய்க்காலிலோ அல்லது மறுபுறம் உள்ள விவசாய நிலத்திலோ விழும் அவலநிலை உள்ளது.

தொட்டி மதகிலிருந்து ஷண்டன் செல்லும் பாதையை நம்பியிருந்த இப்பகுதி மக்களுக்கு, தற்போது இச்சாலையும் குறுகிய காலத்திலேயே கரைந்து போனதால் ஷண்டனில் இருந்து ஈச்சம்பூண்டி வழியாக சுமார் 6 கிலோமீட்டர்கள் சுற்றி அருண்மொழித்தேவன் சென்று அங்கிருந்து மற்ற இடங்களுக்கு செல்லும் அவலநிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் குறிப்பாக வயதானவர்கள், நோயாளிகள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கூடுதல் அவஸ்தைகளை சந்தித்து வருகின்றனர். இந்த தரமற்ற சாலையால் மக்களின் வரிப்பணம் ரூ.40 லட்சம் வீணடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் இப்பகுதி பொதுமக்கள் குறிப்பிட்ட அளவு தடிமண் இல்லாத காரணத்தால்தான் பருவத்தில் ஓரிரு நாள் பெய்த மழைக்கே தாக்குபிடிக்காமல் கரைந்து போய்விட்டது. சாலை அமைக்கும் பணியின் போது தார் கலவையை தோசை ஊற்றியது போலவும் ஊற்றிச்சென்றதாகவும் குற்றம்சாட்டினர்.

மேலும் அவசரகால ஊர்தியான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் கூட சுற்றிக்கொண்டு வரும் நிலை தற்போதும் நீடிப்பதாக தெரிகிறது. இந்நிலைக்கு பணியின் போது இருந்த அதிகாரிகளின் அலட்சிய போக்குதான் காரணமாக அமைந்துள்ளது. ஒரே கிராமத்தில் உள்ள இரு பிரதான சாலையும், புதிதாக போடப்பட்டு சில மாதங்களுக்குள்ளாகவே சிதிலமடைந்ததால் ஷண்டன் மற்றும் வேளப்பூண்டி பொதுமக்கள் ஊராட்சி நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இன்னும் 3 மாத காலத்தில் நெல் அறுவடை துவங்க இருப்பதால் அறுவடை செய்யப்பட்ட நெல்லை இங்கிருந்து வெளியே கொண்டு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படுவதற்குள் அப்பகுதி பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் அப்பகுதி சாலைகளை ஆய்வு செய்து சாலை அமைக்கும் பணியில் முறைகேடு செய்தவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் சம்பா அறுவடைக்குள் புதிய தார்சாலை அமைத்திட வழிவகை செய்ய வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: