×

1. 65 ஏக்கர் பரப்பளவு கொண்டது குப்பை மேடாகி போன அட்டைகுளம் மினி விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா?

மார்த்தாண்டம், டிச. 12: மார்த்தாண்டத்தில் குப்பை மேடாகி போன அட்டை குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி மினி விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.குமரி மாவட்டத்தின் இரண்டாவது வர்த்தக நகரமாக விளங்கி வருவது மார்த்தாண்டம் நகர பகுதியாகும். குழித்துறை நகராட்சியின் மையப் பகுதியாக விளங்கும் மார்த்தாண்டம் பகுதிக்கு மலையோர பகுதி மக்கள் முதல் கடலோர மக்கள் வரை வேலை கல்வி மற்றும் பல்வேறு தேவைகளுக்காக தினம் வந்து செல்கின்றனர்.மேலும் கேரளாவையொட்டி இப்பகுதி அமைந்துள்ளதால் மார்த்தாண்டம் நகர பகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், நெருக்கடி மிகுந்த பகுதியாகவும் இருந்து வருகிறது. மேலும் தொழில் ரீதியாகவும் வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில வியாபார மக்களும் வந்து செல்கின்றனர்.ஆனால் நகர கட்டமைப்பு வசதிகளில் மார்த்தாண்டம் பின்தங்கியே உள்ளது. பொழுதுபோக்கவும், ஓய்வு எடுக்கவும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பூங்காக்களோ, நூலகங்களோ, விளையாட்டு மைதானங்களோ இல்லாத நிலை உள்ளது. மார்த்தாண்டம் சந்திப்பையொட்டி 1.65 ஏக்கர் பரப்பளவில் அமைய பெற்ற அட்டை குளமும் இன்று காணாமல் போயிற்று.

 கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை செயல்பாட்டில் இருந்த அட்டைகுளம் குப்பை கூழங்களால் நிரப்பபட்டு ஆக்கிரமிப்புகளின் பிடியில் சிக்கி இன்று 1 ஏக்கருக்கும் குறைவாகவே காணப்படுகிறது. நகர வளர்ச்சி காரணமாக ஓட்டல், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு கழிவுநீர் கலந்து குளம் மாசு பட்ட நிலையில் குளத்தை பாதுகாக்க நகராட்சி நிர்வாகமும் பொதுப்பணித் துறை அதிகாரிகளும் தவறி விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.குமரி மேற்கு மாவட்ட பகுதியில் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒரு மினி ஸ்டேடியம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 1987 களில் குழித்துறை நகராட்சி தலைவராக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.மணி ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தார். கழிவு நீர் கலந்து பயன்பாடு இல்லாமல் காணப்படும் அட்டைகுளம் பகுதியை நிரப்பி மினி விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்ற திட்டத்தை முன்வைத்தார்.
இது தொடர்பாக அப்போதய மாவட்ட ஆட்சியர் சுந்தரதேவன் தலைமையில் நடந்த மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து வாவு பலி பொருட்காட்சி தொடக்க விழாவுக்கு வந்த மாவட்ட ஆட்சியரும் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கபடும் என உறுதி அளித்தார்.

காலப்போக்கில் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளபடாததால் விளையாட்டு மைதானம் திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் வார்த்தைகளோடு கரைந்து போனது.விளைவு குப்பைகளும், கழிவு மண்களும் கொட்டும் இடமாக அட்டைகுளம் மாறி போனது. இந்நிலையில் நாளுக்கு நாள் மார்த்தாண்டத்தில் அதிகரித்து வந்த போக்குவரத்து நெருக்கடியை ஓரளவு குறைக்கும் வகையில் வடக்கு சாலையிலிருந்து அட்டைகுளம் வழியாக சாலை அமைக்கப்பட்டு ஒரு வழிப் பாதையாக மாற்றம் செய்யப்பட்டது. அந்த சாலையும் குறுகலாக இருந்ததால் சிறிய வாகனங்கள் மட்டுமே இயக்க பட்டன. இந்நிலையில் மக்கள் பயன் பாட்டில் இருந்த அட்டைகுளம் காணாமல் போனதாகவும் அதை கண்டுபிடித்து தரும் படி நீதிமன்றத்தில் தொடர்ந்த தனிநபர் பொது நல வழக்கில் நீதிமன்றம் அட்டைகுளத்தை ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டு வருமாறு பொதுப்பணித் துறைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டது.

இதையடுத்து பொதுப்பணித்துறையினர் குப்பை மேடாகி போன அட்டை குளத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டும் முயற்சியை மேற்கொண்டனர். இதை கண்ட ஒரு தரப்பினர் குளம் தோண்டப் பட்டால் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடும் தொற்று நோய்களும் பரவும் எனக் கூறி தோண்டும் பணிகளை தடுத்து நிறுத்தினர். இதன் பின்னர் எந்த பணிகளும் நடைபெறாததால் கழிவுகளை வீசும் குப்பை மேடாகவும் துர்நாற்றம் வீசும் பகுதியாகவும் மாறி போனது அட்டை குளம் பகுதி. எனவே ஆக்கிரமிப்புகளிடையே சிக்கி பயன்பாடில்லாமல் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வரும் அட்டைகுளத்தை பொதுமக்கள் நலன் கருதி மினி விளையாட்டு மை தானமாக மாற்றி அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : area ,playground ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...