×

2 இடங்களில் குழாய்கள் உடைப்பு நாகர்கோவிலில் 10 நாட்களாக குடிநீர் வினியோகம் பாதிப்பு பொதுமக்கள் கடும் அவதி

நாகர்கோவில், டிச. 12:  நாகர்கோவில் அருகே குடிநீர் குழாயில் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டு உள்ளது. 10 நாட்களுக்கு மேல் தண்ணீர் வராமல் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.நாகர்கோவில் நகர பகுதிக்கு முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு கிருஷ்ணன் கோயிலில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம் குடிநீர் தொட்டிகளில் நிரப்பப்பட்டு, பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. முக்கடல் அணையில் இருந்து ஈசாந்திமங்கலம், இறச்சக்குளம், புத்தேரி வழியாக குழாய்கள் பதிக்கப்பட்டு, தண்ணீர் வருகிறது. இவ்வாறு தண்ணீர் வரும் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த வாரம் புத்தேரி, ஈசாந்திமங்கலம் அருகே முக்கடல் அணையில் இருந்து வரும் குடிநீர் குழாய்களில் 2 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. இதனால் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் நிரப்பும் பணி பாதிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த இரு நாட்களாக இந்த குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணி நடைபெற்றது. இந்த பிரச்னை காரணமாக கடந்த 10 நாட்களாக நகரின் பல இடங்களில் குடிநீர் வினியோகம் இல்லை. குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சுற்றி உள்ள கிருஷ்ணன்கோவில், வாத்தியார்விளை, அருகுவிளை, புதுக்குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் வந்து 10 நாட்களுக்கு மேல் ஆகி விட்டதாக பொதுமக்கள் கூறி உள்ளனர். தெருக்களில் உள்ள நல்லிகளில் கூட  தண்ணீர் வர வில்லை. இது குறித்து நகராட்சி பணியாளர்களிடம் கேட்ட போது, 2 இடங்களிலும் 60 எம்.எம் அளவுள்ள குழாய்கள் உடைந்து விட்டது. அவற்றை சரி செய்யும் பணியால் தான் குடிநீர் வினியோகம் நடைபெற வில்லை. நேற்று உடைப்பு சீரமைக்கப்பட்டு கான்கிரீட் போடப்பட்டது. இன்று மாலை முதல் தண்ணீர் வினியோகம் தொடங்கும் என்றனர்.

Tags : places ,Nagercoil ,
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...