×

ரூ.1 கோடியில் சீரமைக்கப்பட்ட நயினார்குளம் சாலையில் மெகா பள்ளங்கள்

வாகனஓட்டிகள் அவதி
நெல்லை, டிச. 11: நெல்லை நயினார்குளம் சாலையில் மெகா பள்ளங்கள் ஏற்பட்டு சாலை உருக்குலைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.நெல்லை மாநகர பகுதிகளில், ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்திற்கு பிறகு பெரும்பாலான சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கற்று குண்டும், குழியுமாக மாறி விடுகின்றன. சேதமான சாலை பகுதிகளில் தற்காலிக பேட்ஜ்ஒர்க் பணி மட்டுமே செய்யப்படுகிறது. தரமற்ற முறையில் சாலைகள் அமைக்கப்படுவதே, அடிக்கடி சாலை பழுதுக்கு காரணமென சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.இந்தாண்டு வடகிழக்கு பருவமழை பெயரளவில் பெய்த நிலையிலும், மாநகர பகுதியில் ஆங்காங்கே சாலைகள் சிதிலமடைந்து காட்சியளிக்கின்றன. குறிப்பாக நெல்லை டவுன் நயினார்குளம் சாலை, குண்டும் குழியுமாக பெரிய பள்ளங்களாக காணப்படுகின்றன.

இந்த சாலை, கனரக போக்குவரத்துக்கு வசதியாக சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டது. ஒரு கிலோ மீட்டர் தொலைவுகூட இல்லாத இச்சாலையை சீரமைக்க இவ்வளவு தொகையா? என அப்போதே சமூக ஆர்வலர்களும், பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர். குளக்கரை பகுதி என்பதால் தரமாக அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இருப்பினும் வழக்கம்போல சாலை சீரமைக்கப்பட்ட ஓரிரு மாதங்களிலேயே சேதமானது. தொடர்ந்து பராமரிப்பில்லாத நிலையில், வாகனங்களில் செல்ல முடியாத அளவுக்கு படுமோசமானது. இதனால் வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.இதனிடையே நெல்லை பல்கலைக்கழக விழாவிற்கு கவர்னர் வருகையையொட்டி நயினார் குளக்கரை சாலையில் பேட்ச்ஒர்க் பணிகள் நடந்தன. இதனால் மாநகர மக்கள் மட்டுமின்றி இச்சாலை வழியாக வாகனங்களில் செல்வோரும் ஓரளவு நிம்மதி அடைந்தனர்.

தற்போது பெய்த மழை காரணமாக மீண்டும் இச்சாலை மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. ஆங்காங்கே உருவாகியுள்ள பெரும்பள்ளங்கள், உயிர் பலி வாங்க காத்திருக்கின்றன. குளக்கரை சாலையில் இருந்து ஆர்ச் திரும்பும் வளைவை கடக்க வாகன ஓட்டுநர்கள் படும்பாடு சொல்லி மாளாது. பேருந்துகளில் பயணிகள் தூக்கி வீசப்படுகின்றனர். குழிகளை கவனிக்கும் செல்லும் பஸ்களில் சிறார்கள், முதியவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகின்றனர்.இந்த சாலை வழியாகத்தான் நெல்லையின் மேற்கு பகுதியில் உள்ள தென்காசி, பாபநாசம், சேரன்மகாதேவி மற்றும் டவுன் பகுதிகளை சேர்ந்த மக்கள் சந்திப்பு, பாளை. பகுதிக்கு வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மார்க்கெட்டுக்கும் கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. மேலும் குளக்கரை சாலையின் இருபகுதிகளிலும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளங்களை கடக்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகின்றனர். பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் வேகமாக செல்லும்போது கிளம்பும் தூசியால் சுவாச கோளாறுகள் ஏற்படும் அபாயமும் காணப்படுகிறது.

எனவே நயினார்குளக்கரை சாலையை போர்க்கால அடிப்படையில் தரமாக புதுப்பிக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.அமலைச்செடிகளால்பெருக்கெடும் தண்ணீர்நயினார்குளத்தில் தேங்கி நிற்கும் அமலைச்செடிகளை மீன் குத்தகை எடுத்தவர்கள், ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி சாலையோரம் குவித்து வருகின்றனர். அமலைகள் குவிக்கப்படும்போது சாலைகளில் ஆறாக தண்ணீர் பெருக்கெடுக்கிறது. இந்த குளத்துநீர், சாலை பள்ளங்களில் தேங்கி, பெரும் பள்ளங்களாக உருவாக காரணமாகின்றன. கடந்த இரண்டு மாதங்களில் அடிக்கடி அமலைச்செடிகள் அள்ளப்படும் நிலையில், அவ்வவ்போது சாலையில் தண்ணீர் கரைபுரண்டோடுவது குறிப்பிடத்தக்கது.



Tags : road ,Nayankarkulam ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...